📅 Monday, 14 September 2026 IST | ஆவணி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 14, 2026 07:34 PM

கோப்பை பெற மாட்டோம் என சொல்லிவிட்டு மோஷின் நக்வியிடம் சிரித்து பேசியது ஏன்? பிசிசிஐ விளக்கம்

கோப்பை பெற மாட்டோம் என சொல்லிவிட்டு மோஷின் நக்வியிடம் சிரித்து பேசியது ஏன்? பிசிசிஐ விளக்கம்

கோப்பை பெற மாட்டோம் என சொல்லிவிட்டு மோஷின் நக்வியிடம் சிரித்து பேசியது ஏன்? பிசிசிஐ விளக்கம்

துபாய்: மகளிர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியின் போது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை ஒரு இயல்பான சந்திப்புதான் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா விளக்கம் அளித்துள்ளார். இப்போட்டியில் மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற இந்திய மகளிர் அணி மறுத்த போதிலும், இந்தச் சந்திப்பு குறித்து எழுந்த விவாதங்களுக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில், இலங்கை அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இருப்பினும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் என்ற முறையில் அங்கு வந்திருந்த பாகிஸ்தானின் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையையோ அல்லது பரிசுகளையோ பெற இந்திய அணி மறுத்துவிட்டது.

பகல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்திய வீராங்கனைகள் பரிசளிப்பு விழாவில் பங்கேற்கவில்லை.இதற்கு முன்னதாக, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியும் மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழ்நிலைக்கு மத்தியிலும், பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா மற்றும் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் மொஹ்சின் நக்வியுடன் விஐபி பகுதியில் அமர்ந்து சுமுகமாகப் பேசிக்கொண்டிருந்த காட்சிகள் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தின.

இது குறித்து விளக்கம் அளித்த தேவஜித் சைகியா, "நாங்கள் யாருடனும் பேசவே மாட்டோம் என்று அர்த்தமல்ல. டாஸ் போடப்பட்டதில் இருந்து போட்டி முடியும் வரை நான் ராயல் பாக்ஸ் இருக்கையில்தான் அமர்ந்திருந்தேன். அங்கு அமர்ந்திருந்தபோது, என்னைச் சந்திக்க வந்த அனைவரையும் நான் எதிர்கொண்டேன். சிலர் என் அருகில் அமர்ந்தனர், பின்னர் ராஜீவ் சுக்லாவும் வந்து என்னுடன் அமர்ந்தார். நீங்கள் குறிப்பிடும் அந்த நபரும் (மொஹ்சின் நக்வி) துணைத் தலைவர் காலித் சாஹிபுடன் வந்து எங்கள் அருகில் அமர்ந்தார்" என்று கூறினார்.

"யாராவது நம்மிடம் பேச வரும்போது, அவர்களைச் சந்திப்பதும் உரையாடுவதும் ஒரு சாதாரண நடைமுறைதான். அன்றைய சூழ்நிலையைச் சுமுகமாகத் தீர்க்க நாங்கள் முயன்றோம், ஆனால் எங்கள் முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதற்காக எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. கோப்பையை யார் வழங்குகிறார்கள் என்பதில் எங்களுக்கு எந்த முன்னுரிமையோ அல்லது ஈடுபாடோ இல்லை. இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் முக்கிய நோக்கமாக இருந்தது, அதை நாங்கள் சாதித்துவிட்டோம்" என்று சைகியா கூறினார்.