📅 Sunday, 30 August 2026 IST | ஆவணி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 30, 2026 01:03 AM

கர்நாடக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை காரணமாக காவிரியில் தமிழகத்துக்கு 12,000 கன அடி நீர் திற‌ப்பு

கர்நாடக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை காரணமாக காவிரியில் தமிழகத்துக்கு 12,000 கன அடி நீர் திற‌ப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், தமிழகத்துக்கு வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த 25-ம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 9,000 கன அடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த கர்நாடக அரசு, 6,000 கன அடி நீர் திறந்து விடுவதாகத் தெரிவித்தது.

இந்நிலையில் மைசூரு, மண்டியா ஆகிய இடங்களில் விவசாய சங்கத்தினரும் கன்னட அமைப்பினரும் தமிழகத்துக்குக் காவிரி நீர் திறக்கக் கூடாது என வலியுறுத்தி தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மண்டியாவில் நேற்று காவிரி ஆற்றில் இறங்கி கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது கர்நாடக, தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளான தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. குடகு மாவட்டத்தில் கடந்த 48 மணி நேரத்தில் 48 மி.மீ. மழை பதிவானது. இதனால் மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

மைசூருவில் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரத்தில் உள்ள க‌பினி அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 7 மணி நிலவரப்படி 2,272.10 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5,110 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து 8,260 கன அடி நீர் திறந்து விட‌ப்பட்டுள்ள‌து.

மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 108.80 அடியாக (மொத்த அடி 124.80) உயர்ந்திருக்கிறது. அணைக்கு வினாடிக்கு 7,995 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து 6,872 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதில் 3,000 கன அடி நீர், மைசூரு மாவட்ட விவசாயிகளின் பாசனத்துக்காகக் கால்வாயில் திறக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ண ராஜ சாகர், கபினி ஆகிய 2 அணைகளில் இருந்தும் தமிழ்நாட்டுக்கு மொத்தமாக வினாடிக்கு 12,000 கன அடி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.

காவிரியில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காவிரி கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரியில் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.