கருப்பு பஞ்சாயத்து.. நான் நடிச்ச காட்சிகள் எங்கே? சூர்யா & RJ பாலாஜி மீது மன்சூர் அலிகான் ஆதங்கம்
சென்னை: சூர்யா நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள 'கருப்பு' திரைப்படம் தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் பேசியுள்ள விஷயம் தற்போது கவனம் பெற்றுள்ளது. படத்தில் தான் நடித்த பல காட்சிகள் இடம்பெறவில்லை என்றும், குறிப்பாக பாடல் காட்சியில் தான் மிகவும் கஷ்டப்பட்டு நடித்தும் அந்த காட்சிகள் திரையில் வராதது தனக்கு வருத்தமாக இருப்பதாகவும் மன்சூர் அலிகான் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான 'கருப்பு' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படக்குழுவினரும் ரசிகர்களும் கொண்டாட்டத்தில் இருக்கும் நிலையில், படத்தில் நடித்திருந்த மன்சூர் அலிகானின் பேச்சு தற்போது பேசுபொருளாகியுள்ளது.
நான் கஷ்டப்பட்டு ஆடினேன்.. காட்சிகள் எங்கே?: 'கருப்பு' படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றில் மன்சூர் அலிகான் தனது சகோதரர்களுடன் இணைந்து நடனமாடும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த காட்சிகளில் தானும் தனது குடும்பத்தினரும் முக்கியமாக இடம்பெறுவோம் என்று எதிர்பார்த்த நிலையில், இறுதியில் தான் நடித்த பல காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை என்பதுதான் அவரது ஆதங்கமாக உள்ளது.
இதுகுறித்து அவர் பேசும்போது, "கருப்பு படத்தில் நான் ரிங்க் மேலே நின்று பார்ட்டிகளை வீசிக்கொண்டு டான்ஸ் ஆடினேன். அந்த காட்சிகள் எல்லாம் படத்தில் வரவே இல்லை. தயாரிப்பாளரிடம் கேட்டபோது யூடியூப்பில் போடுகிறோம் என்று சொன்னார்கள். ஆனால், கடைசியில் யூடியூப்பிலும் அந்த காட்சிகள் வரவில்லை. சூர்யாவுக்கு இவ்வளவு பில்ட்அப் காட்சிகள் வைக்கிறீர்கள். ஆனால், என்னை மட்டும் டம்மி மாதிரி நிற்க வைத்திருக்கிறீர்கள். நான் கஷ்டப்பட்டு ஆடிய இரண்டு, நான்கு நிமிட காட்சிகளையாவது வைத்திருக்கலாம்" என்று மன்சூர் அலிகான் பேசியுள்ளார்.
மேலும், "அன்று நான் என் மகனை ஷூட்டிங்கிற்கு அழைத்துச் சென்றிருந்தேன். படத்தைப் பார்த்த பிறகு, 'ஏன்ப்பா, நீங்க நடித்த சீன் வரலையே' என்று என் மகன் கேட்டான். அதற்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை" என்றும் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கதாநாயகனுக்காக மற்றவர்களை இருட்டடிப்பு செய்கிறார்கள்: தொடர்ந்து பேசிய மன்சூர் அலிகான், இது தன்னுடைய விஷயம் மட்டுமல்ல என்றும், பல துணை நடிகர்கள் மற்றும் கதாபாத்திர நடிகர்கள் நடித்த காட்சிகள் கதாநாயகனின் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக நீக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
"நான் மட்டும் இல்லை. பல நடிகர்கள், துணை நடிகர்களுடைய காட்சிகள் கதாநாயகனுக்காக இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. கதாநாயகனுடைய காட்சிகளை பில்ட்அப் செய்வதற்காக மற்றவர்களின் காட்சிகளை வெட்டி எடுக்கிறார்கள். ஆனால், மலையாள படங்கள் வெற்றி பெறுவதற்கு ஒரு காரணம் எல்லா கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதுதான். கதாநாயகனுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தமிழ் படங்களில் கதாநாயகனுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், "சினிமாவில் இருக்கும் அனைத்து கலைஞர்களும் சேர்ந்து உழைத்துதான் ஒரு கதாநாயகனை உருவாக்குகிறார்கள். அப்படி இருக்கும்போது, மற்ற கதாபாத்திர நடிகர்கள் மற்றும் துணை நடிகர்களின் உழைப்பையும் அங்கீகரித்து மதிக்க வேண்டும்" என்றும் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.
'கருப்பு' படத்தின் வெற்றிக்கு மத்தியில் மன்சூர் அலிகானின் இந்த ஆதங்கம் தற்போது திரையுலகில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தான் நடித்த பாடல் காட்சிகளுக்காக இவ்வளவு உழைத்தும் அவை திரையில் இடம்பெறாதது குறித்து அவர் வெளிப்படையாகப் பேசியிருப்பது சமூக வலைதளங்களிலும் விவாதமாகி வருகிறது.