📅 Sunday, 27 September 2026 IST | புரட்டாசி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 27, 2026 02:03 PM

கரூர் கூட்ட நெரிசல் முதலாண்டு நினைவேந்தல்: திரளானோர் கண்ணீர் அஞ்சலி

கரூர் கூட்ட நெரிசல் முதலாண்டு நினைவேந்தல்: திரளானோர் கண்ணீர் அஞ்சலி

கரூர்: கரூர் தவெக கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் முதலாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு கரூர் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா அருகே அலங்கரிக்கப்பட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த பதாகைக்கு உயிரிழந்தவர்களின் உறவினர்கள், தவெகவினர் கருப்பு ஆடை அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தி, கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்தாண்டு செப். 27ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் அறிவிக்கப்பட்டு அவர்களது வங்கி கணக்குகளில் தொகை வரவு வைக்கப்பட்டது.

அதன்பின் உயிரிழந்தவர்கள் குடும்பங்களை தவெக தலைவர் விஜய் சென்னைக்கு வரவழைத்து ஆறுதல் கூறினார். இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றிப்பெற்று காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது.

இதையடுத்து உயிரிழந்தவர்களின் 31 பேர் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் கடந்த ஜூலை 10ம் தேதி முதல்வர் விஜய் கருணை அடிப்படையில் பணிகளை வழங்கினார். முன்னதாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் விஜய் உயிரிழந்தவர்களுக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்தாண்டு செப். 27ம் தேதி உயிரிழந்தவர்களின் முதலாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு தவெக சார்பில் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே இன்று (செப். 27ம் தேதி) மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.

இதில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த பதாகையில் உயிரிழந்த 41 பேரின் புகைப்படங்களுக்கு பதிலாக எரியும் மெழுகுவர்த்தி படங்கள், அதன் கீழே உயிரிழந்தவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

மாநில துணைப் பொதுச் செயலாளரும், மாவட்ட அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மேற்கு மாவட்ட செயலாளரும், மாநில நிர்வாகக் குழு உறுப்பினருமான வி.பி.மதியழகன், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ ம.சத்யா, கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் கருப்பு ஆடை, கருப்பு வில்லை அணிந்து, எரியும் மெழுகுவர்த்தி ஏந்தி, மலர் வளையம் வைத்து மவுன அஞ்சலி செலுத்தினர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மலர் வளையம் வைத்து, மெழுகுவர்த்தி ஏந்தி, கண்ணீர் விட்டு அழுது, அஞ்சலி செலுத்தினர்.