📅 Sunday, 27 September 2026 IST | புரட்டாசி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 27, 2026 01:03 PM

தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகலை தீவிரப்படுத்த செப்.30

தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகலை தீவிரப்படுத்த செப்.30

புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலக வலியுறுத்துவது குறித்து விவாதிப்பதற்காக வருகிற 30-ம் தேதி இந்தியா கூட்டணியின் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கும், தேர்தல் ஆணையாளர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டது.

இதையடுத்து, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் இந்த விவகாரத்தில் நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதேபோல இடதுசாரி கட்சிகளும் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி போராட்டங்களை அறிவித்துள்ளன.

இந்நிலையில், இந்தப் பிரச்சினை தொடர்பாக விவாதிப்பதற்காக வரும் 30-ம் தேதி இண்டியா கூட்டணியின் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடக்கும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே, திரிணமூல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி மற்றும் அபிஷேக் பானர்ஜி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் பதவி நீக்க தீர்மானத்தை கொண்டு வருவது, ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணைக்கான கோரிக்கையை தீவிரப்படுத்துவது மற்றும் இந்த விவகாரத்தில் நாடு தழுவிய போராட்டத்திற்கான ஒரு கட்டமைப்பை வகுப்பது ஆகிய மூன்று முக்கிய முடிவுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கூட்டத்தில் இண்டியா கூட்டணியில் இல்லாத அனைத்து எதிர்க்கட்சிகள், சிவில் சமூக உறுப்பினர்கள் மற்றும் அரசியல் நோக்கர்கள் என பல தரப்பினரும் பங்கேற்ற வேண்டும் என சிபிஐ (எம்எல்)-லிபரேஷன் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.