📅 Thursday, 13 August 2026 IST | ஆடி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 13, 2026 07:02 PM

கட்சி சேர டூ பான் இந்தியா: 12 படங்களுடன் மிரட்டும் சாய் அபயங்கர்!

கட்சி சேர டூ பான் இந்தியா: 12 படங்களுடன் மிரட்டும் சாய் அபயங்கர்!

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இசையமைப்பாளரான சாய் அபயங்கர், தற்போது தொடர்ச்சியாக பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்று வருகிறார். சிறுவயதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசைப்பள்ளியில் இசைக் கற்ற சாய் , பின்னாளில் அனிருத்தின் இசைக் குழுவில் பணி புரிந்து வந்தார்.

பின்னர் 'கட்சி சேர ' பாடலின் மூலம் தமிழகமெங்கும் அறியப்படும் பிரபலமானார். அதன் பின்னர் தொடர்ச்சியாக ஒரு சில ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்து வெளியிட்டு வந்தார். அவரது ஆல்பங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டான நிலையில் சினிமாவிற்கான வாய்ப்பு கதவைத் தட்டியது.

சாய் அபயங்கரின் இசையில் வெளியான 'கருப்பு' திரைப்படம் மிகப்பெரிய அளவில் பாக்ஸ் ஆபிஸில் வெற்றியை பெற்றது. தென்னிந்திய மொழி திரைப்படங்களைப் பொறுத்தவரையில் , வெற்றி பெற்ற திரைப்படங்களில் பணிபுரியும் கலைஞர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்கும்.

அதேபோல கருப்பு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சாய் அபயங்கருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது. கருப்பு திரைப்படம் முன் கூட்டியே வெற்றி பெறும் திரைப்படமாக கணிக்கப்படவில்லை. அந்த திரைப்படத்தின் வெற்றிக்கு இசையும் பாடல்களும் ஒரு காரணம் என்பதால் , சாய் அபயங்கருக்கான மவுசு கூடியுள்ளது. தற்போது சாய் கைவசம் 12 பெரிய திரைப்படங்கள் உள்ளது.

இந்த பட்டியலில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'பென்ஸ்' திரைப்படம் முதலாவதாக உள்ளது. சாய் அபயங்கர் முதன் முதலாக இசையமைப்பாளராக ஒப்பந்தமானது இந்த திரைப்படத்திற்காகத்தான். கருப்பு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 'சூர்யா 48' திரைப்படத்திற்கும் அவரே இசையமைக்கிறார்.

மேலும் பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் புதிய திரைப்படம் , கார்த்தி நடிக்கும் ' மார்சல்' திரைப்படம் , துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கவுள்ள புதிய திரைப்படம், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய திரைப்படம் , சிம்பு நடிக்கும் மற்றொரு திரைப்படம் , வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'தமிழ் முருகன்' திரைப்படம் , விஜய் சேதுபதி நடிப்பில் ' பக்தா' திரைப்படம் என ஒரு டஜன் திரைப்படங்களுக்கு இசையமைக்க உள்ளார்.

இது மட்டுமல்லாமல் தனுஷ் நடிக்கும் ' ஓம்' திரைப்படம் , சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படம் ஆகியவற்றிற்கும் சாய் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளது , தமிழ் திரை உலகில் பரபரப்பான செய்தியாக மாறி உள்ளது. சாய் அபயங்கர் மார்க்கெட் உச்சத்திற்கு செல்ல , அனிருத்திற்கு தொடர் வாய்ப்பை வழங்கிய தனுஷ், சிவா கார்த்திகேயன் , விஜய் சேதுபதி ஆகியோர் தற்போது சாய்க்கு வாய்ப்புகளை வழங்கி வரத் தொடங்கியுள்ளனர். இந்த திரைப்படங்கள் வெற்றி பெற தொடங்கினால் , சாய் அபயங்கருக்கான வாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும் .

தமிழ் திரையுலகில் தொடர் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய சாய்க்கு , பெரிய வாய்ப்பாக அல்லு அர்ஜுன் நடித்து வரும் 'ராக்கா' திரைப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த திரைப்படத்தினை பிரபல தமிழ் இயக்குநர் அட்லீ இயக்குகிறார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இந்த திரைப்படம் தேசிய அளவில் சாய்க்கு நல்ல அறிமுகத்தைக் கொடுக்கும் . அனிருத்தை ஹிந்தி திரையுலகில் அறிமுகப்படுத்திய அட்லீ தான் இப்போது தன் கூட்டணியை மாற்றியுள்ளார். இப்படி தொடர்ச்சியாக அனிருத்திற்கு வாய்ப்பு வழங்கியவர்கள் , தற்போது சாய் அபயங்கர் பக்கம் திரும்பியுள்ளனர்.