யுபிஐ சேவை இலவசமாகவே தொடரும்: வணிக பரிவர்த்தனைக்கே கட்டணம் என நிதியமைச்சகம் விளக்கம்
புதுடெல்லி: பொதுமக்களின் அன்றாட யுபிஐ டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘வரி மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா 2026’ மக்களவையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இது பொதுமக்கள் மற்றும் சிறு வணிகர்களைப் பாதிக்கும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.
இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
ஒரு நபர் யுபிஐ மூலம் இன்னொரு நபருக்கு (பர்சன்-டூ-பர்சன்)) பணம் பரிவர்த்தனை செய்யும்போது எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. இவ்வாறு யுபிஐ பரிவர்த்தனை செய்யும் நபர்களுக்கு இலவச சேவை தொடரும். பொதுமக்களின் அன்றாட யுபிஐ டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படாது.
வணிகர் தள்ளுபடி விகித (எம்டிஆர்) கட்டணம் நுகர்வோருக்கானது அல்ல. ஆண்டுக்கு ரூ. 1 கோடிக்கும் அதிகமாகப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் பெரிய அளவிலான வணிகர்களிடம் மட்டுமே குறிப்பிட்ட குறைந்தபட்சக் கட்டணம் விதிப்பது குறித்து தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா முழுமையாக நிறைவேறிய பிறகே இதுதொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.