📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 24, 2026 02:05 AM

கட்டாய உழைப்பை எதிர்க்கும் கருத்தரங்கு: அமெரிக்காவுடன் சிங்கப்பூர் பங்கேற்பு, சிங்க‌ப்பூர் செய்திகள்

கட்டாய உழைப்பை எதிர்க்கும் கருத்தரங்கு: அமெரிக்காவுடன் சிங்கப்பூர் பங்கேற்பு, சிங்க‌ப்பூர் செய்திகள்

கட்டாய உழைப்பு மூலம் தயாரிக்கப்படும் பொருள்களின் இறக்குமதித் தடைகளை அமல்படுத்துவது குறித்து அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் கடந்த வாரம் புதன்கிழமை (செப்டம்பர் 16) ஏற்பாடு செய்திருந்த இணையவழிக் கருத்தரங்கில் சிங்கப்பூர் அரசாங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

சொந்த எல்லைகளில் இறக்குமதித் தடைகள் விதிப்பதன் மூலம், கட்டாய உழைப்பினால் தயாரிக்கப்படும் பொருள்களின் வர்த்தகத்தை எதிர்க்க விருப்பமுள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட வர்த்தக பங்காளிகளின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்ததாக அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்தகைய இறக்குமதித் தடைகளைத் திட்டமிடுவது மற்றும் நடைமுறைப்படுத்துவது குறித்து அமெரிக்கா அந்தக் கருத்தரங்கு வாயிலாகத் தனது கண்ணோட்டத்தைப் பகிர்ந்துகொண்டதாக சிங்கப்பூரின் வர்த்தக, தொழில் அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்துடன் தொடர்ந்து ஆக்கபூர்வமாக ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சு, இணையவழிக் கருத்தரங்குகளில் பங்கேற்ற அதிகாரிகளின் விவரங்களை வெளியிடவில்லை.

சிங்கப்பூரிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உள்நாட்டுப் பொருள்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு US$9.5 பில்லியன் வருடாந்தர மதிப்புடையவை. அந்தப் பொருள்கள் ஜூலை 24 அன்று 12.5 விழுக்காட்டு வரிவிதிப்புக்கு உட்படுத்தப்பட்டன.

கட்டாய உழைப்பு முறையைப் பயன்படுத்துவதாக அமெரிக்கா முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு இடையே, 10 அல்லது 12.5 விழுக்காட்டு வரிவிதிப்புக்கு உள்ளான பல நாடுகளுடன் சிங்கப்பூரும் சேர்க்கப்பட்டது.

குறைந்த வரிகளைப் பெற தொடர்ந்து முயலும் அதேவேளை பேச்சுவார்த்தை தொடர்பான எந்தவொரு நடவடிக்கையையும் சிங்கப்பூர் கவனமாகப் பரிசீலிக்கும் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் இதற்கு முன்னர் கூறியிருந்தார்.

அமெரிக்க வரிகள் தொடர்பான சிங்கப்பூரின் வர்த்தக அரசதந்திர முயற்சிகள் அவரது தலைமையில்தான் மேற்கொள்ளப்படுகின்றன.