கும்பகோணம்: தண்டவாளத்தை கடக்க முயன்றவரை காப்பாற்ற முயற்சி; கேட் கீப்பர் உள்பட இருவர் உயிரிழப்பு
உயிரிழந்த கேட் கீப்பர் ராகுல்
கும்பகோணம்: பாபநாசம் வட்டம் கோபுரராஜபுரத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றவரை காப்பாற்றச் சென்ற கேட் கீப்பர் உள்பட 2 பேர் நேற்றிரவு உயிரிழந்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதீர் குமார் மகன் ராகுல் (30). இவர் பாபநாசம் வட்டம் ரயில்வே இருப்புப் பாதை கேட் கீப்பராக பணியாற்றி வந்தார். பாபநாசத்தில் தனது நண்பர்களுடன் அறை எடுத்து வசித்துவந்தார். இந்நிலையில், ராகுல் நேற்று பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, ராமேஸ்வரத்தில் இருந்து தாம்பரம் செல்லும் அந்த்யோதயா விரைவு ரயில் தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது முதியவர் ஒருவர் தண்டவாளத்தை கடப்பதை அறிந்த ராகுல், அவரைக் காப்பாற்றுவதற்காக சென்றுள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக வேமாக வந்த ரயில் இருவர் மீதும் மோதியது.
இதில் தண்டவாளத்தை கடக்க முயன்றவரின் உடல், ஒரு கி.மீ. வரை இழுத்துச் செல்லப்பட்டது. இதனை அறிந்த ரயில்வே லோகோ பைலட், ரயிலில் இருந்து இறங்கி பார்த்த போது ராகுல் உடல் ரயில் ஓரத்தில் கிடந்தது தெரியவந்தது.
உடனடியாக லோகோ பைலட் ராகுலின் உடலை கும்பகோணம் ரயில் நிலையத்தில் இறக்கி வைத்து விட்டு மற்றொருவர் உயிரிழந்து கிடப்பதாக தகவல் அளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.
இது தொடர்பாக கும்பகோணம் ரயில்வே இருப்பு பாதை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, உயிரிழந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, உயிரிழந்த ரயில்வே ஊழியர் ராகுலுக்கு திருமணமாகி 5 மாதங்கள் ஆன நிலையில் கடந்த 15 நாட்கள் முன்பு தனது மனைவியை பார்த்துவிட்டு பணிக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.