'குடிநீர் தட்டுப்பாட்டை தீர்ப்பதில் அரசு மெத்தனம்'
சென்னை: குடிநீர் தட்டுப்பாட்டை தீர்ப்பதில், த.வெ.க., அரசு மெத்தனமாக செயல்படுவதாக, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் புகார் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டால், மக்கள் வீதியில் இறங்கி போராடும் அவல நிலை தொடர்வது கவலை அளிக்கிறது. ஏரி, குளங்கள் வறண்டு, நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது.
இந்த பிரச்னையை எதிர்கொள்ள, த.வெ.க., அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறியதே, தாகத்தில் மக்கள் தவிப்பதற்கு முக்கிய காரணம். ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்ததும், மக்களை மறந்து விட்ட முதல்வர் விஜயின் மெத்தனப்போக்கு கண்டிக்கத்தக்கது.
இனியாவது அவர் விழித்துக்கொண்டு, மக்களின் தாகம் தீர்க்க, ஆழ்துளை கிணறுகள் அமைப்பது, லாரிகள் மூலம் குடிநீர் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், பருவ மழை தொடங்கும் முன்பே, போர்க்கால அடிப்படையில், ஏரி, குளங்களை துார்வாருவதோடு, தண்ணீரை சேமிக்கும் வகையில், ஆங்காங்கே சிறு தடுப்பணைகளையும் கட்ட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.