📅 Sunday, 23 August 2026 IST | ஆவணி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil August 23, 2026 05:04 PM

M³+ ஆக பரிணமித்த மலாய்/முஸ்லிம் சமூக ஒற்றுமை

M³+ ஆக பரிணமித்த மலாய்/முஸ்லிம் சமூக ஒற்றுமை

2018ல் அன்றைய முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகித்த அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லியால் ‘M³’ (எம் கியூப்) கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

மெண்டாக்கி, முயிஸ் எனும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம், மெஸ்‌ரா எனும் மக்கள் கழக மலாய் நற்பணிச் செயற்குழுக்களின் பேரவை ஆகிய மூன்று அமைப்புகளின் ஒருங்கிணைந்த பங்காளித்துவ முயற்சியாக இது தொடங்கப்பட்டது.

இக்கூட்டணி தற்போது மேலும் பல சமூக அமைப்புகளையும் இணைத்து ‘M³+’ (எம் கியூப் பிளஸ்) ஆக விரிவடைந்துள்ளது. பிரதமர் லாரன்ஸ் வோங் தனது தேசிய தினப் பேரணி உரையில் மலாய்/முஸ்லிம் சமூகத்தின் முதன்மைப் பலமே அவர்களின் ஒற்றுமைதான் என்பதைச் சுட்டிக்காட்டினார். M³+ கட்டமைப்பு இந்த ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சமூக முதியோருக்கான ஆதரவு

அங் மோ கியோவில் உள்ள முதியவர்களுக்கு ஆதரவளிக்க அல்-முத்தகீன் பள்ளிவாசல், முகம்மதியா ஆகிய அமைப்புகள் இணைந்து ‘சந்தூனான் மாஸ்’ திட்டத்தைத் தொடங்கின.

M³+ கட்டமைப்பு மூலம் நிபுணர்களின் ஆலோசனைகளையும் அனுபவங்களையும் பெற்று இத்திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்படுகிறது. இச்சேவை விரைவில் ஈசூன், செம்பவாங், உட்லண்ட்ஸ் ஆகிய இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது என்று பிரதமர் அறிவித்தார்.

பொருளியல் வாய்ப்புகளும் பங்காளித்துவமும்

புதிய வாய்ப்புகளை உருவாக்க அமைப்புகளுக்கு இடையிலான பங்காளித்துவம் வலுப்படுத்தப்பட்டு வருகிறது. பெர்காஸ் அமைப்புக்கும் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் சங்கத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பு இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இதன் மூலம் அஸாட்டிஸா தலைமையிலான நிறுவனங்கள் ஆலோசனை ஆதரவு, மின்னிலக்கக் கருவிகள், வணிக கட்டமைப்புகள் ஆகியவற்றைப் பெறுகின்றன. மறுபுறம், வணிகங்கள் வட்டாரச் சந்தைகளுக்கு விரிவாக்கம் செய்யும்போது, சமூகத்தின் கலாசார, மொழி ஆற்றலால் பயனடைகின்றன.

இம்முயற்சிகள் அனைத்தும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன என்றும் அதிகமான மலாய்/முஸ்லிம் சிங்கப்பூரர்கள் பல்வேறு துறைகளிலும் தங்களது முத்திரையைப் பதித்து வருகின்றனர் என்றார் பிரதமர்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

பலர் பொதுச் சேவை, சிங்கப்பூர் ஆயுதப்படை நீதித்துறை, தொழில்முறைகள், வணிகம் உட்படப் பல துறைகளில் சிறப்புடன் சேவையாற்றுகின்றனர். தங்களது சமூகத்திலும் பாரம்பரியத்திலும் உறுதியாக வேரூன்றி நிற்கும் வேளையில், அவர்கள் சிங்கப்பூரின் முன்னேற்றத்திற்கும் பங்காற்றி வருகின்றனர் என்று மேலும் கூறினார் பிரதமர்.

வலுவான ஒரு மலாய்/முஸ்லிம் சமூகத்தைக் காண்பது மட்டுமன்றி, மலாய்/முஸ்லிம் சிங்கப்பூரர்கள் சிங்கப்பூருக்குப் பேரளவில் ஆற்றிவரும் பங்களிப்பையே நாம் காண விரும்புகிறோம்; அதுவே நமது முதன்மை நோக்கமுமாகும் என்று பகிர்ந்தார் பிரதமர் லாரன்ஸ் வோங்.