📅 Tuesday, 25 August 2026 IST | ஆவணி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 23, 2026 09:05 PM

சிங்கப்பூரின் எதிர்காலத்திற்கான நீண்டகாலத் திட்டம்

சிங்கப்பூரின் எதிர்காலத்திற்கான நீண்டகாலத் திட்டம்

முந்தைய தலைமுறையினர் வகுத்த திட்டங்களும் எடுத்த முயற்சிகளும் சிங்கப்பூரைத் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்துள்ளதைச் சுட்டிக்காட்டி அடுத்த தலைமுறையினருக்கான சிங்கப்பூரை வடிவமைப்பது நம் கடமை என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

சிறிய தீவுகள் இணைக்கப்பட்டு புதிய மேற்குத் தீவு உருவாக்கம், செந்தோசாவிற்குப் புத்துயிரூட்டுவது, தெக்கோங் தீவின் எதிர்காலத் திட்டம், ‘லாங் ஐலண்ட்’ கொண்டுவரும் வாய்ப்புகள் என அடுத்த பல ஆண்டுகளுக்கும் சிங்கப்பூரின் எதிர்காலத் தலைமுறையினர்க்குக் கூடுதல் நிலத்தையும் பல்வேறு வாய்ப்புகளையும் உருவாக்கக்கூடிய நெடுங்காலத் திட்டங்களை அவர் விவரித்தார்.

ஜுரோங் தீவு உருவாக்கப்பட்ட வரலாற்றை நினைவுகூர்ந்த அவர், நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள புலாவ் செமக்காவ், புலாவ் புக்கோம், புலாவ் சுடோங் உள்ளிட்ட சில சிறிய தீவுகளை ஒன்றிணைத்து, புதிய ‘மேற்குத் தீவு’ உருவாக்கப்படும் என்றார்.

அந்தப் புதிய தீவு, மேம்பட்ட உற்பத்தி வசதிகள் உள்ளிட்ட புதிய தலைமுறைத் தொழில்களுக்கும், சிங்கப்பூரின் எதிர்காலத் தேவைகள், தற்காப்புப் பயன்பாடுகளுக்கான புதிய மின் உற்பத்திக் கட்டமைப்புகளுக்கும் ஆதரவளிக்கும்.

அத்துடன், ஜுரோங் தீவைப் புதிய மேற்குத் தீவோடு இணைக்க புதிய இணைப்புப் பாதை அமைக்கப்படும்.

ராணுவப் பயிற்சிகளுக்கு முக்கியமாகப் பயன்படுத்தப்படும் புலாவ் தெக்கோங்கைத் தீவின் முதன்மைப் பகுதியுடன் இணைக்க கடலடி சுரங்கப்பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் அரசாங்கம் ஆராயும். அத்துடன், சுற்றுலாத் தீவான செந்தோசாவையும் அருகிலுள்ள புலாவ் பிரானியையும் ஒருங்கிணைக்கும் வகையில் நிலமீட்புத் திட்டமும் பரிசீலிக்கப்படும்.

அத்திட்டங்களுக்குப் பல அரசாங்கக் காலகட்டங்களில் வளங்களும் முறையான திட்டமிடலும் முதலீடுகளும் தேவைப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

“நம் முன்னோடிகள் ஜுரோங் தீவை உருவாக்கியபோது அது என்னவாக மாறும் என்று யாருக்கும் தெரியாது. அவர்கள் நமக்காகத் திட்டமிட்டுக் கட்டினார்கள். இப்போது நாம் அடுத்தடுத்த தலைமுறையினருக்காக அதனைச் செய்வோம்,” என்று அவர் கூறினார்.