📅 Friday, 14 August 2026 IST | ஆடி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 14, 2026 04:00 PM

Magudam Review

Magudam Review

நடிகர்கள் - விஷால், அஞ்சலி, துஷாரா

இயக்குநர் - விஷால்

சென்னை: விஷால் நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் மகுடம். இதில் அவருடன் அஞ்சலி, துஷாரா விஜயன், ஜான் விஜய், தம்பி ராமைய்யா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். விஷாலே முதன்முறையாக இயக்கியிருக்கும் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பை படம் சம்பாதித்திருந்தது. இந்நிலையில் இன்று அதே ஹைப்போடு தியேட்டர்களிலும் ரிலீஸாகிவிட்டது படம்.

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்துவருபவர் விஷால். அடிப்படையில் இயக்குநராக வேண்டும் என்ற முழு முனைப்போடுதான் திரைத்துறைக்குள் வந்தார். ஆனால் அவரை காலம் நடிகராக மாற்றிவிட்டது. சூழல் இப்படி இருக்க இயக்குநராக வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசையை இப்போது மகுடம் திரைப்படத்தின் மூலம் நிறைவேற்றியிருக்கிறார். இப்படத்தின் கதையை ஈட்டி இயக்குநர் ரவி அரசு எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

என்ன கதை?: விஷால் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் படம் என்பதால்; இதுவரை வராத கதையோடு அவர் வந்திருக்கிறார் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். வழக்கம்போல் பழி வாங்கல் கதைதான். அதில் தந்தை - மகன் பாசத்தையும், ஹார்பர் கடத்தலையும் கலந்து சமைத்திருக்கிறார். தந்தையை வெறுக்கும் மகன் ஒருவன் மீண்டும் அந்த தந்தையை புரிந்துகொண்டாரா சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் கதையின் ஒன் லைன்.

எப்படி இருக்கு படம்?: படத்தின் ஆரம்பமே 60களில் ஆரம்பித்து; குழந்தைகள் கடத்தப்படுவதிலிருந்து தொடங்குகிறது. ஆஹா இதன் பின்னணியில்தான் ஒட்டுமொத்த படமும் அமையப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பில் சீட்டில் நிமிர்ந்து அமர்ந்தால்; அதெல்லாம் இங்கே இல்லை என்று கதை யூ டர்ன் அடித்து, ரைட்டில் இன்டிகேட்டரை போட்டு லெஃப்ட்டில் கை காண்பித்து வேறு எங்கேயோ சென்றுகொண்டிருந்தது கதை. முதல் பாதியில் துஷாரா விஜயனின் நடிப்பும், ஸ்க்ரீன் ப்ரெசன்ஸும் அவ்வளவு அழகு.

நீ....ண்ட முதல் பாதி: குடும்பத்தோடு இருக்கும் மகன் விஷால் ஒரு கார் வாங்க படாத பாடு படுகிறார். அந்த சீக்வென்ஸில் மிடில் கிளாஸ் குடும்பத்தின் நிலைமையையும், அவர்களிடம் பணம் இல்லை என்றால் கார் ஷோ ரூம்களில் மதிக்கப்படும் நிலைமையையும் காண்பித்து ஓரளவுக்கு ஸ்கோர் செய்கிறார்கள்தான். ஆனால் அது கொஞ்ச நேரம் மட்டுமே. முதல் பாதியில் தம்பி ராமைய்யா காமெடி என்கிற பெயரில் எதையோ செய்ய; ரசிகர்களாகிய நாமும் கன்னத்தில் கை வைத்து சிரிக்காமல் இருக்கும் நிலைமைதான் உருவானது. அதுமட்டுமின்றி முதல் பாதி ரொம்பவே நீளம்தான்.

என்ன பாஸ் இதெல்லாம்?: அதேசமயம் முதல் பாதியிலேயே தந்தை விஷாலை இடையில் அறிமுகப்படுத்தி வைத்து; அதை பெரிய சஸ்பென்ஸ் உடைப்பாக நினைத்துக்கொண்டு இடைவேளை காட்சியை அதோடு முடிக்கிறார்கள். அது கொஞ்சம் ரசிக்கும்படி இருந்தாலும்; இன்னும் கொஞ்சம் அந்த ஏரியாவில் உழைப்பை போட்டிருக்கலாம் என்றே தெரிகிறது. முதல் பாதியில் ஒரு கலரில் இருந்த கதை இரண்டாவது பாதியில் வேறு கலருக்கு மாறுகிறது.

மற்ற படங்களின் வாசனை: அதிலும் இரண்டாவது பாதியில் அத்தியாயம் அத்தியாயமாக சொல்லப்பட்டிருப்பது அப்படியே வடசென்னை வாசனையை கொண்டு வருகிறது. படக்குழு அதை கொஞ்சம் கவனித்திருக்கலாம். அதுமட்டுமின்றி ஒரு சாதாரண மனிதர் டானாக மாறி ஒட்டுமொத்த ஹார்பரையும் கன்ட்ரோலில் வைத்திருப்பதெல்லாம் ஓகேதான். இருப்பினும், அவர் எப்படி டானாக மாறினார்; அந்த ஹார்பரை வில்லனாக காட்டப்படுபவர் கொடுத்தற்கான வலுவான காரணம் என்ன என்பதற்கெல்லாம் பதிலே இல்லை. தம்பியை அடித்துவிட்டால் போதுமா?.. என்ன பாஸ் இதெல்லாம்?..

அஞ்சலி, விஷால், ஜிவி சூப்பர்: படத்தில் ப்ளஸ்ஸே இல்லையென்றால் இருக்கிறதுதான். திரைக்கதை ஓரளவுக்கு தேறும். மேலும், அஞ்சலி நடிப்பு உண்மையில் மிரட்டலாகவே இருந்தது. அவரது அலட்சியம், தைரியம் என அத்தனையிலும் நம்மை கட்டிப்போட்டுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டாவது பாதியில் அவர் நடித்த ஆக்‌ஷன் காட்சிகள் எல்லாம் உண்மையில் சூப்பர். மேடத்துக்கு இது தமிழில் தரமான கம்பேக். விஷாலும் தந்தையாகவும், மகனாகவும் தன்னால் முடிந்த அளவுக்கு நன்றாகவே நடித்திருக்கிறார். இருப்பினும் தந்தை விஷால் கெட்டப்பிலும் வாய்ஸ் மாடுலேஷனிலும் மார்க் ஆண்டனி வாடை அடிப்பதையும் தடுக்க முடியவில்லை. அத்தனைக்கும் மேலே ஜிவி பிரகாஷின் இசைதான் டாப். தந்தை விஷாலுக்கு அவர் போட்டிருக்கும் பின்னணி இசை கூஸ்பம்ப்ஸ் தருகிறது.

ஓவர் டோஸான விஷயங்கள்: படத்தில் ஆக்‌ஷன் இருக்கிறதுதான். ஆனால் அதை ஓவர் டோஸாக கொடுத்துவிட்டார் விஷால். இரண்டாவது பாதியில் முக்கியமான கேரக்டர் ஒன்று கொல்லப்பட்டபோதே படம் முடிந்துவிட்டது என்று சீட்டிலிருந்து எழுந்தால்; அதெல்லாம் இல்லை இன்னும் இருக்கு என இன்னொரு க்ளைமேக்ஸை 20 நிமிடங்களுக்கும் மேலாக ஓட்டினார் இயக்குநர் விஷால். அது ரசிக்கும்படி இருந்ததா என்றால் அதுவும் இல்லை.குறிப்பாக அந்த சண்டை காட்சியில் பெண்களை பயன்படுத்தியது எல்லாம் ஓகேதான். ஆனால் அது ரொம்பவே ஓவர் டோஸாகி இதெல்லாம் நம்பும்படியா இருக்கிறது என்ற கேள்வியையும் உருவாக்கிவிட்டு சென்றுவிட்டது.

அதேபோல் இந்த ரெட்ரோ பாடல்களை ஏன்தான் இந்த பாடு படுத்துகிறார்களோ தமிழ் சினிமாவில். லோகேஷ் கனகராஜ் ஆரம்பித்து வைத்த விஷயம் இப்போது அனைவரிடமுமே அந்தப் பழக்கத்தை பின்பற்ற வைத்துவிட்டது. இந்தப் படத்தில் சம்பந்தமே இல்லாமல் எதற்கு இளையராஜா பாடல். சண்டை காட்சிக்கும், முத்து மணி மாலை பாடலுக்கும் என்ன தொடர்பு?.. அது சுத்தமாக ஒர்க் அவுட்டே ஆகவில்லை என்பதுதான் தியேட்டர்களில் படம் பார்த்தவர்களில் பெரும்பாலானோரின் கருத்து.

தலையிலா? தரையிலா?: ஒளிப்பதிவாளர்களாக மூன்று பேர் பணியாற்றியிருக்கிறார்கள். அவர்களின் வேலைப்பாடு தரமாக இருக்கிறது. எடிட்டர் மட்டும் யோசிக்காமல் இன்னும் பல சீன்களை வெட்டி தூக்கியிருக்கலாம். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் படம் ஓடுகிறது. நாம்தான் கனெக்ட்டே ஆக முடியவில்லை. வந்து வந்து பழகிப்போன கதையை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து; ஆக்‌ஷன், எமோஷன் எல்லாம் சேர்த்து இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார் விஷால். ஆனால் லாஜிக் ஓட்டைகள், நீண்ட பாதிகள், எக்குத்தப்பாக சென்ற கதை, திரைக்கதை என பல விஷயங்களில் சொதப்பியிருக்கிறார். ஆகமொத்தம் இந்த மகுடம் விஷாலின் தலைக்கு ஏறவில்லை என்பதுதான் உண்மை..