மேகேதாட்டு அணைக்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டம் எப்போது?
கனிமொழி எம்.பி
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொகுதி மறுவரையறை மசோதாவில் ‘ப்ரோ-ரேட்டா’ அடிப்படையில் அனைவருக்கும் ஒரே சமமாக அதிகரிக்கப்படும், தமிழ்நாட்டின் சதவீதம் எந்தக் காலகட்டத்திலும் மாறாது என்று உள்துறை அமைச்சர், அவையில் வாய்மொழியாகச் சொன்னாரே தவிர, அது மசோதாவுக்குள் இல்லை.
அதனால் நாங்கள் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நிராகரித்தோம். இப்போது மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதாவை இந்த கூட்டத்தொடரில் கொண்டுவருவதற்கான வாய்ப்பு இல்லை என்பதுதான் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ள செய்தி.
அரசாங்கத்தை இயக்குவது யார்? - அப்படி இருக்கும்போது எதற்காக இந்த எம்.பி.க்கள் கூட்டம் கூட்டப்படுகிறது? யார் இந்தக் கூட்டத்தின் பின்னணியில் இருக்கிறார்கள்? யார் இந்த அரசாங்கத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்?
காவிரி நீர் பங்கீடு பிரச்சினை, மேகேதாட்டு பிரச்சினை,விவசாயிகளின் பிரச்சினை இவற்றையெல்லாம் திசைதிருப்ப வேண்டும் என்ற ஒரேஎண்ணத்தோடும், தங்களது கூட்டணியில் இருப்பவர்களுக்கு எந்தவிதமான தர்மசங்கடமும் வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தோடும் எம்.பி.க்கள் கூட்டம்நடத்தப்பட்டிருக்கிறது.
மேலும் இந்த மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை நேரடியாகச் சென்று சந்தித்தார் என்று சொல்லியிருக்கிறார்கள்.
பொதுவாக நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவைக் கொண்டுவர வேண்டுமென்றால் எல்லா தலைவர்களையும் அழைத்துப் பேசுவார்கள். ஆனால், போனமுறை தோற்கடிக்கப்பட்ட மசோதாவை இப்போது மறுபடியும் கொண்டுவரப் போகிறோம், அதனால் அதைப் பற்றிப் பேசவேண்டும் என்று திமுகவை இதுவரை யாரும் அழைக்கவில்லை.
ஆட்சிப் பொறுப்பில் இருக்கக்கூடிய தவெக அரசு, அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையோ அல்லது பிரதிநிதிகளையோ அழைத்துச் சென்று, மத்தியநீர்வளத்துறை அமைச்சரையோ அல்லது மற்ற அமைச்சர்களையோ சந்தித்து மேகேதாட்டு பிரச்சினையை எடுத்துச் சொல்வது என்றால், நிச்சயமாகத் திமுக அவர்களோடு செல்லத் தயாராக இருக்கிறது.
மேகேதாட்டு விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று தொடக்கத்திலிருந்தே வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால்,கூட்டத்தைக் கூட்ட மறுக்கிறார்கள். நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை மசோதா வருகிறதா இல்லையா என்றே தெரியாத சூழலில், அதைப் பற்றி விவாதித்து என்ன பயன்? இவ்வாறு அவர் தெரிவித்தார்.