மேகமலை சரணாலயத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் ராணுவத்தை அனுப்புவோம்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
-டில்லி சிறப்பு நிருபர்-
'தேனி மாவட்டம் மேகம லை புலிகள் சரணாலய வனப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் முற்றிலும் அகற்றப்பட வேண்டும்.
'அங்குள்ள இலவம்பஞ்சு தோட்டங்களையும் கையகப்படுத்தி, பணியாளர்களை அங்கு இருந்து அப்புறப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும்' என, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேனி மாவட்டம் மேகமலை மற்றும் நெல்லை மாவட்டம் மாஞ்சோலையில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் இருந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, ''மேகமலை புலிகள் சரணாலய வனப்பகுதியில் 4,600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள் வசிப்பதற்கான மாற்று இடம் கண்டறியப்பட்டு, அவர்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. ஆக்கிரமிப்புகளை முழுதாக அகற்ற மூன்று மாதம் அவகாசம் தேவைப்படுகிறது,'' என்றார்.
மேகமலையில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இலவம்பஞ்சு தோட்டங்களில் வேலைக்கு ஆட்களை அமர்த்தியதே ஆக்கிரமிப்புக்கு முக்கிய காரணம். எனவே, புலிகள் சரணாலயத்தில் உள்ள இலவம்பஞ்சு தோட்டங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட்டு, அப்புறப்படுத்தப்பட வேண்டும். இதில் எந்த சலுகையும் காட்டக் கூடாது. அதே போல், விடுதிகளை மூடினால் மட்டும் போதாது; ஆக்கிரமிப்பு கட்டடங்களையும் ஒன்றுவிடாமல் இடித்து அகற்ற வேண்டும்.
ஆக்கிரமிப்பு கட்டடங்களுக்கான மின்சாரம் மற்றும் நீர் இணைப்புகளை உடனடியாகத் துண்டிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் யாருக்கும் நிலப் பட்டா வழங்கக் கூடாது.
மாநில அரசால் ஆக்கிரமிப்புகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், வனப்பகுதியைப் பாதுகாக்க துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும்.
மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றியது தொடர்பான நிலை அறிக்கையை, இரு வாரங்களில் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை செப்., 8ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.