📅 Thursday, 20 August 2026 IST | ஆவணி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 20, 2026 12:04 PM

நீர்தான் நம்முடைய மிகப்பெரிய சொத்து நீர்வளத்தை காப்பாற்ற வேண்டும்: சவுமியா வேண்டுகோள்

நீர்தான் நம்முடைய மிகப்பெரிய சொத்து நீர்வளத்தை காப்பாற்ற வேண்டும்: சவுமியா வேண்டுகோள்

நீர்தான் நம்முடைய மிகப்பெரிய சொத்து நீர்வளத்தை காப்பாற்ற வேண்டும்: சவுமியா வேண்டுகோள்

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று நீர்வளம், ஊரக வளர்ச்சி, சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பாமக சட்டமன்ற கட்சி தலைவர் சவுமியா பேசியதாவது: நம் கண் முன்னாடியே ஒரு சொத்து வீணாகிக்கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது நீர்வளம்தான். உலகிலேயே தன்னூத்து (நிலத்திற்கு அடியில் சுரக்கக்கூடிய நீர்) இரண்டே இடங்களில்தான் இருக்கிறது. ஒன்று ஆஸ்திரேலியாவில் இருக்கிறது.

இன்னொன்று நம்முடைய ஊர் நெய்வேலியில் இருந்திருக்கிறது. ஆனால் இன்று அங்கு தன்னூத்து இல்லை. ஏனென்றால் லிக்னைட் கார்ப்பரேஷன் மூலமாக தண்ணீர் முழுவதும் உறிஞ்சப்பட்டிருக்கிறது. அதேபோல இன்னொரு அதிசயம் சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம். 15 ஆயிரம் ஏக்கர் சதுப்பு நிலமாக இருந்தது, இப்போது 2,500 ஏக்கராக குறைந்துவிட்டது.

மற்றொரு அதிசயம் கூவம். 72 கிலோ மீட்டர் தூரம் இந்த ஆறு ஓடுகிறது. திருவள்ளூரில் உள்ள கூவம் என்ற ஊரில் இருந்து அது தொடங்குகிறது. அங்கு இந்த தண்ணீரை தான் இன்றும் குடிக்கிறார்கள். கோயிலுக்கு அந்தத் தண்ணீரில்தான் அபிஷேகம் செய்கிறார்கள். விவசாயத்திற்கும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அந்த கூவம் எப்போது சென்னைக்கு வருகிறதோ ரசாயனக் கழிவு, நம்முடைய சாக்கடை கழிவு, திடக்கழிவு எல்லாம் கலந்து சாக்கடை மாதிரி மாறிவிட்டது. முதலில் கூவத்தில் கொட்டும் குப்பையை தடுத்து நிறுத்த வேண்டும்.

மழை நீர் சேமிப்பை கட்டாயமாக்க வேண்டும். நம் கண் எதிரே நம்முடைய சொத்து கைவிட்டுப்போகிறது என்றால் அது நீர்வளம்தான். எத்தனையோ ஆறு, ஏரி, குளங்கள் காணாமல் போய்விட்டன. கிராமங்களில் ஒரு ஏக்கர் பரம்பரை சொத்துக்காக நீதிமன்றம் வரை சண்டை போடும் மக்கள், நம் கையை விட்டுச் செல்லும் நீர்வளத்தை காப்பதில் அக்கறை காட்ட வேண்டும். நீர்தான் நம்முடைய மிகப்பெரிய சொத்து. நம் எதிர்கால தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லும் மிகப்பெரிய சொத்து நீர்வளம்தான். செஞ்சி கோட்டையை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

* குறும்பர் இன மக்களுக்கு

சவுமியா பேசும்போது, தர்மபுரியில் குறும்பர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் உள்ளனர். அவர்கள் எஸ்சி சான்றிதழ் கேட்டு வருகின்றனர். அவர்கள் பள்ளிக்கூடத்திற்கோ, கல்லூரிக்கோ செல்ல முடியவில்லை. ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திற்கு சென்று ஆர்டர் வாங்கி வந்து விட்டு படிக்கிறார்கள். அதனை பரிசீலனை செய்து வழங்க வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன்: குறும்பர் இன மக்களுக்கு எஸ்சி சான்றிதழ் வழங்குவது தொடர்பாக அரசு பரிசீலித்து ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. ஒன்றிய அரசிடம் எடுத்துச் சொல்லி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.