IND vs SL: 31 வயதான இந்திய வீரர் 2வது டெஸ்டிலிருந்து நீக்கப்பட வாய்ப்பு.. சரன்ஸ் ஜெய்னுக்கு இடம்?
IND vs SL: 31 வயதான இந்திய வீரர் 2வது டெஸ்டிலிருந்து நீக்கப்பட வாய்ப்பு.. சரன்ஸ் ஜெய்னுக்கு இடம்?
காலே: இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இருப்பினும், கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் குறைந்தபட்சம் ஒரு மாற்றத்தையாவது செய்ய இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்தத் தொடரை முழுமையாகக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்திய அணி, முதல் போட்டியில் பந்துவீச்சில் சுமாரான செயல்பாட்டை மட்டுமே வெளிப்படுத்திய குல்தீப் யாதவை நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக வேறு ஒரு வீரரை சேர்க்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குல்தீப் யாதவ் நீக்கப்படும் பட்சத்தில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதாகும் அனுபவ ஆஃப் ஸ்பின்னரான சரண்ஷ் ஜெயின் கொழும்பு SSC மைதானத்தில் தனது சர்வதேச கிரிக்கெட் அறிமுகத்தைப் பெற அதிக வாய்ப்புள்ளது.முதலாவது டெஸ்ட் போட்டியில் 25 ஓவர்கள் வீசிய குல்தீப் யாதவ், 103 ரன்களை வாரி வழங்கி ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார்.
மற்றொரு புறம், தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய இளம் வீரர் மானவ் சுதார், 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் அபார வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்தார். இதன் மூலம் இந்திய அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. மற்றொரு இடதுகை சுழற்பந்து வீச்சாளரான ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் தன் பங்கிற்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்படி, முதல் போட்டியில் மூன்று இடதுகை சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் கண்ட இந்திய அணியில், குல்தீப் யாதவ் மட்டுமே எதிர்பார்த்த அளவிற்குச் செயல்படவில்லை. எனவே, அவருக்குப் பதிலாக சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான சரண்ஷ் ஜெயினுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்தியப் பிரதேச அணிக்காக உள்நாட்டுப் போட்டிகளில் கடுமையாக உழைத்துத் தனது திறமையை நிரூபித்ததன் விளைவாக, இலங்கைத் தொடருக்கான இந்திய அணியில் சரண்ஷ் ஜெயினுக்கு முதல்முறையாக அழைப்பு விடுக்கப்பட்டது. காயம் காரணமாக இந்தத் தொடரைத் தவறவிட்ட வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக, ஆஃப் ஸ்பின் ஆல்-ரவுண்டரான இவர் அணியில் சேர்க்கப்பட்டார்.
2014-ல் முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமான சரண்ஷ் ஜெயின், இதுவரை 54 போட்டிகளில் விளையாடி 27.30 சராசரியுடன் 188 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அத்துடன் 2 சதங்கள் மற்றும் 14 அரைசதங்கள் உட்பட 2223 ரன்களையும் குவித்துள்ளார்.
2025-26 ரஞ்சி கோப்பை தொடரில் மத்தியப் பிரதேச அணியின் நட்சத்திர வீரராகத் திகழ்ந்தார். அந்த சீசனில் அவர் 30 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.பேட்டிங்கிலும் அசத்திய அவர், 7 போட்டிகளில் 57.55 சராசரியுடன் 518 ரன்கள் குவித்து, தனது அணியின் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.
இந்தத் தொடருக்கு முன்னதாக, இலங்கை ஏ அணிக்கு எதிரான இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஏ அணிக்காக சரண்ஷ் விளையாடினார். முதல் போட்டியில் ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்திய அவர், இரண்டாவது போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, ஆட்டமிழக்காமல் 70 ரன்களையும் குவித்து அசத்தினார்.