📅 Friday, 14 August 2026 IST | ஆடி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka August 14, 2026 06:03 PM

மீனவர்கள் பிரச்னையில் கடிதம் எழுதினால் மட்டும் போதுமா: முதல்வர் விஜய்க்கு உதயநிதி கேள்வி

மீனவர்கள் பிரச்னையில் கடிதம் எழுதினால் மட்டும் போதுமா: முதல்வர் விஜய்க்கு உதயநிதி கேள்வி

சென்னை:மீனவர் பிரச்னையில் கடிதம் எழுதினால் மட்டும் போதுமா என்று முதல்வர் விஜய்க்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கை;

ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது கண்டிக்கத்தக்கது. இந்த பிரச்னை தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சருக்கு இந்த அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.

மீனவர் பிரச்னையில், 'மானே - தேனே - பொன்மானே என்று கடிதம் எழுதினால் மட்டும் போதுமா? உணர்வுப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டாமா?' என்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நம்மை பார்த்து சொன்னவர்கள், இப்போது கடமைக்கு கடிதம் மட்டும் எழுதுவது ஏன்?

ஆட்சிக்கு முன் - ஆட்சிக்குப் பின் என ஒவ்வொரு விஷயத்திலும் இரட்டை வேடம் போடுவது போல, மீனவர் பிரச்னையிலும் இந்த அரசு ஏமாற்று வேலைகளில் ஈடுபடக்கூடாது.

இவர்கள் சொன்ன அந்த உணர்வுப்பூர்வமான நடவடிக்கையை உடனடியாக மேற்கொண்டு, இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்.

இவ்வாறு உதயநிதி கூறி உள்ளார்.