📅 Thursday, 13 August 2026 IST | ஆடி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 13, 2026 09:00 PM

மீனவர்களை விடுவிக்கக்கோரி... ஆக்‌ஷனில் இறங்கிய முதலமைச்சர் விஜய்..!

மீனவர்களை விடுவிக்கக்கோரி... ஆக்‌ஷனில் இறங்கிய முதலமைச்சர் விஜய்..!

மீனவர்களை விடுவிக்கக்கோரி... ஆக்‌ஷனில் இறங்கிய முதலமைச்சர் விஜய்..!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 9 மீனவர்களை விடுவிக்கக்கோரி முதலமைச்சர் விஜய் வெளியுறவு அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகையும் மீட்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று (ஆக. 13) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், ஆகஸ்ட் 12ஆம் தேதி இரவு IND-TN-10-MM-329 என்ற பதிவு எண் கொண்ட மீன்பிடிப் படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்த சம்பவத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் தனிப்பட்ட கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாக தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இதுபோன்று இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது மீனவ சமூகத்தினரிடையே, குறிப்பாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில், மிகுந்த கவலையையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இதுவரை 49 இந்திய மீனவர்கள் இலங்கை அரசால் சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, தகுந்த தூதரக நடவடிக்கைகள் வாயிலாக இலங்கை அரசிடம் இக்கோரிக்கையை முன்வைத்து, சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் விரைவாக விடுவித்து, அவர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரை தமிழ்நாடு முதலமைச்சர் அக்கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வதால், தாங்கள் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்வது பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கும், தமிழ்நாட்டு மீனவ சமூகத்தினருக்கும் இவ்விவகாரத்தில் பெரும் நம்பிக்கையையும் நிம்மதியையும் அளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இப்பொருண்மை குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் உடனடி தலையீட்டைத் தான் எதிர்நோக்குவதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.