மகளிர் இலவச பஸ்களில் 'வெற்றி பயணம்' பெயர் பலகை
மகளிர் இலவச பயண திட்டத்தின் விரிவாக்கத்தின்படி, மாநகர, நகர பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண, சொகுசு பஸ்களிலும், மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ளும் புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில், சாதாரண கட்டண பஸ்களிலும், வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல் மகளிர் இலவச பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மகளிர் இலவச பயண பஸ்களை அடையாளம் காணும் வகையில், 'வெற்றி 'பயணம்' என்ற 'டிஜிட்டல்' பலகை அமைக்கப்பட உள்ளது. இதுகுறித்து, போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-
மகளிர் இலவச பயண திட்டத்தின்படி, சென்னையில் 3,633 பஸ்களிலும், மாவட்டங்களில் 9,000-க்கும் மேற்பட்ட பஸ்களிலும் பயணம் செய்யலாம். இதற்கான வழிகாட்டு முறைகளை, தமிழக அரசு விரைவில் வெளியிடும். மகளிர் இலவச பயண பஸ்களை அடையாளம் காணும் வகையில் மாநகரங்களில், 'வெற்றி பயணம்' என பெயரிட்டு, டிஜிட்டல் பலகையுடன் பஸ்கள் இயக்கப்படும்.
மாவட்ட பஸ்களில், 'மகளிர் கட்டணம் இல்லா பயணம்" என, குறிப்பிட முடிவு செய்துள்ளோம். இந்த பஸ்களுக்கு பிரத்யேக வண்ணம் பூசுவது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.