ரூ.22,000 கோடி கடனுக்கு வெறும் ரூ.6.5 கோடி..! வங்கிகளுக்கு அல்வா.. திவால் சட்டத்தால் தப்பிய முன்னாள் ராஜ்யசபா எம்.பி
ரூ.22,000 கோடி கடனுக்கு வெறும் ரூ.6.5 கோடி..! வங்கிகளுக்கு அல்வா.. திவால் சட்டத்தால் தப்பிய முன்னாள் ராஜ்யசபா எம்.பி
டெல்லி: எஸ்செல் குழுமத்தின் (Essel Group) நிறுவனரும், முன்னாள் ராஜ்யசபா எம்.பி-யுமான சுபாஷ் சந்திரா தனக்குள்ள ரூ.22,006.57 கோடி கடன் நிலுவைத் தொகைக்காக, வெறும் ரூ.6.5 கோடி செலுத்தி கடனைத் தீர்ப்பதற்கான தனிநபர் திவால் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT) ஒப்புதல் அளித்துள்ளது பெரும் விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது.
இதன் மூலம் சுபாஷ் சந்திராவிற்கு கடன் கொடுத்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்கள் அசல் தொகையில் 99.97% இழப்பை சந்திக்க நேரிட்டுள்ளது. அதாவது அவர் வாங்கி இருக்கும் ரூ.22,006.57 கோடி அளவிலான மொத்தக் கடனில் வெறும் 0.03% மட்டுமே வசூலாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதிலும் சுபாஷ் சந்திரா செலுத்த போகும் ரூ.6.5 கோடியில், ரூ.6.25 கோடி கடன் கொடுத்த நிறுவனங்களுக்கும், மீதமுள்ள ரூ.25 லட்சம் திவால் செயல்முறைக்கான செலவுகளுக்கும் ஒதுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்செல் குழுமத்தின் தலைவரான சுபாஷ் சந்திரா, தனிப்பட்ட முறையில் தான் வாங்கிய மற்றும் பிணையப் பொறுப்பேற்ற கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு ஆளானார்.
கடன்கள் திருப்பிச் செலுத்தப்படாததால், கடன் கொடுத்த நிறுவனங்கள் (Indiabulls/Samman Capital) அவருக்கு எதிராகத் தனிநபர் திவால் வழக்கை நீதிமன்றத்தில் தொடர்ந்தன.சுபாஷ் சந்திரா வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் செலுத்த வேண்டிய மொத்த நிலுவைத் தொகை ரூ.22,006.57 கோடி ஆகும். துவக்கத்தில் ஒரு தனிநபருக்கு எதிராகத் திவால் நடவடிக்கை எடுக்க NCLT தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இல்லை என்று சுபாஷ் சந்திரா நீதிமன்றத்தில் வாதிட்டு, இந்த வழக்கிற்கு முட்டுக்கட்டை போட முயன்றார்.
ஆனால் அவரது வாதத்தை நிராகரித்த NCLT, கடந்த ஏப்ரல் 2024-ல் அவருக்கு எதிராகத் தனிநபர் திவால் மறுசீரமைப்பு செயல்முறையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.இதன் பின்னர் தான் IBC Section 114 சட்ட விதிமுறைகளின்படி,சிக்கல்களிலில் இருந்து தப்பிக்க இந்த ரூ.6.5 கோடி செலுத்தும் மறுசீரமைப்புத் திட்டத்தை சமர்ப்பித்தார், அதற்கு தான் தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது. முன்னதாக இந்த வழக்கில் 2 நீதிபதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மாறுபட்ட தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், மூன்றாம் நீதிபதியான நீலேஷ் சர்மா, திவால் மற்றும் திவால் திசைக் குறியீட்டுச் சட்டம் (IBC) பிரிவு 114-ன் கீழ் சுபாஷ் சந்திராவின் ஒட்டுமொத்தக் கடனையும் ரூ.6.5 கோடி மட்டுமே செலுத்தி முடித்துக் கொள்ளும் திட்டத்தை ஏற்று அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தார். கடும் எதிர்ப்புகளை மீறியே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.