📅 Saturday, 10 October 2026 IST | புரட்டாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 10, 2026 04:03 PM

மனநலக் கழகம்: சிங்கப்பூர் தேசிய மனநல நிலையமாக பெயர்மாற்றம்

மனநலக் கழகம்: சிங்கப்பூர் தேசிய மனநல நிலையமாக பெயர்மாற்றம்

சிங்கப்பூரின் ஒரே மனநல மருத்துவமனையான ‘மனநலக் கழகம்’, அடுத்த ஆண்டில் ‘சிங்கப்பூர் தேசிய மனநல நிலையம்’ எனப் பெயர் மாற்றம் காண்கிறது. இது நாட்டின் மனநலப் பராமரிப்பு அணுகுமுறையில் ஏற்படும் விரிவான மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது.

சிங்கப்பூரில் மனநலச் சவால்கள் தொடர்ந்து அதிகரித்துவருவதைச் சுட்டிய சுகாதார அமைச்சர் ஓங் யி காங், மனநலப் பராமரிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள சீரமைப்பு நடவடிக்கைகளைக் கோடிகாட்டினார். அவற்றில் மனநலக் கழகத்திற்கு வேறு பெயரிடுவதும் விரிவுபடுத்துவதும் அடங்கும். அத்துடன், இளையர் உதவி நாடுவதில் உள்ள தடைகளை நீக்கப் பெற்றோரின் ஒப்புதல் தொடர்பான விதிமுறைகளில் திருத்தம் செய்யவும் முயற்சிகள் எடுக்கப்படும்.

“புற்றுநோய், இதயம் அல்லது கண் போன்ற நமது மற்ற தேசியச் சிறப்பு சிகிச்சை நிலையங்களைப் போலவே, இதுவும் ஆய்வை முன்னெடுக்கும். மருத்துவமனைகளுக்கு இடையே மனநலப் பராமரிப்பை ஒருங்கிணைக்கும். துறை சார்ந்த திறன்களை மேம்படுத்தும்,” என்று அமைச்சர் ஓங், உலக மனநல தினமான சனிக்கிழமை (அக்டோபர் 10) கூறினார்.

நீண்டகாலப் பராமரிப்புப் பணிகள் படிப்படியாகச் சமூக அடிப்படையிலான நிலையங்களுக்கு மாற்றப்படும் சூழலில், இந்தப் பெயர் மாற்றம் நிகழ்கிறது. இது மனநல நோயாளிகள் பலருக்குக் கழகம், நீண்டகாலத் தங்கும் புகலிடமாக அல்லது ‘நிரந்தர இல்லமாகச்’ செயல்படுவதிலிருந்து பெரிய மாற்றத்தைக் குறிக்கும்.

நாடு முழுதும் அதிகரித்துவரும் மனநலப் பாதிப்புகளைக் கையாள்வதற்குரிய பரந்த அடிப்படையிலான உத்தியின் ஒரு பகுதியாக, புவாங்கோக்கில் உள்ள தற்போதைய இடத்தில் கழகத்தை அரசாங்கம் மறுமேம்பாடு செய்து விரிவுபடுத்தும். இது 2040ஆம் ஆண்டிற்குள் பெரிய, நவீன மருத்துவமனையாக மாற்றப்படும் என்று அமைச்சர் ஓங் சொன்னார்.

மேலும், மத்திய நடுவத்திற்குத் துணையாகப் சாங்கிப் பொது மருத்துவமனை, உட்லண்ட்ஸ் மருத்துவமனை, அலெக்ஸாண்டிரா மருத்துவமனை ஆகிய மூன்று வட்டார மருத்துவமனைகளும் அவற்றின் மனநலச் சிகிச்சைத் திறன்களை வலுப்படுத்தி வருகின்றன.

வசதிகளை விரிவுபடுத்துவதற்கு அப்பால், அதிகரித்துவரும் மனநலச் சவால்களுக்கு நீண்டகாலத் தீர்வு என்பது நோயைத் தடுப்பதும் ஆரம்பகட்டத் தலையீடுமே என்று அவர் வலியுறுத்தினார்.

இளையர்க்கு மனநலப் பராமரிப்புக்கான தடைகளைக் குறைத்தல்

இதற்கிடையே, சேவைகளை வழங்கும் பல்வேறு நிலையங்களில் பெற்றோரின் ஒப்புதலைப் பெறவேண்டிய தேவைகள் குறித்து எதிர்வரும் வாரங்களில் அரசாங்கம் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறியும் என்று அமைச்சர் ஓங் தெரிவித்தார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

சுகாதார அமைச்சு, பெற்றோரின் ஒப்புதல் தொடர்பான வழிகாட்டுதல்களை உருவாக்கி வருகிறது. அதே வேளையில், சிங்கப்பூர் மருத்துவ மன்றம் நெறிமுறை வழிகாட்டுதல்களைத் திருத்தி அமைக்கிறது. இதன் மூலம் மருத்துவர்கள் நோயாளியின் நலனைக் கருத்தில் கொண்டு தகுந்த சிகிச்சையளிப்பதற்குப் பெற்றோரின் ஒப்புதல் குறித்த தெளிவான வழிகாட்டுதல்கள் கிடைக்கும் என்று திரு ஓங் கூறினார்.

சமூகப் பராமரிப்பு நிலையங்கள் மூலமாகவும் அதிகமான இளையர்க்குச் சிகிச்சையும் உதவியும் அளிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

“இளையர் பாதுகாப்பான வழியில் நுழைந்து, சிகிச்சை தொடரும்போது அதற்கேற்பக் குடும்பத்தையும் சரியான முறையில் ஈடுபடுத்துவதே சரியான அமைப்பாகும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

“ஒவ்வொரு கட்டத்திலும், நாம் இளையரின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும், அவர்களின் நல்வாழ்வைப் பாதுகாக்க வேண்டும்,” என்றும் அமைச்சர் ஓங் கூறினார்.