சிங்கப்பூர் வழக்கறிஞருக்கு அனைத்துலக விருது
நீ சூன் குழுத்தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் இங்கின் சட்ட உதவியாளராகச் செயல்பட்டு, ‘ஈத்துவப்போர் உணவு நன்கொடைச் சட்டத்தை’ (Good Samaritan Food Donation Act) உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றிய 32 வயது வழக்கறிஞர் சார்மைன் யாப், அனைத்துலக வழக்கறிஞர் சங்கத்தின் சிறந்த இளம் வழக்கறிஞருக்கான விருதை வென்றுள்ளார்.
சட்டத்துறையிலும் சமூகத்திற்கு ஆற்றிய சிறந்த சேவையைப் பாராட்டி இவருக்கு இந்த அங்கீகாரம் அக்டோபர் 8ஆம் தேதி வழங்கப்பட்டது. இவ்விருதைப் பெறும் இரண்டாவது சிங்கப்பூரர் இவர்.
உணவு நன்கொடையாளர்களைப் பாதுகாக்கும் இச்சட்டத்தை உருவாக்கத் தமது சம்பளத்தில் 20 விழுக்காட்டைக் குறைத்துக்கொண்டு ஈராண்டுகள் தீவிரமாக உழைத்தார். அக்காலகட்டத்தில் ட்ரூ அண்ட் நேப்பியர் சட்ட அலுவலகத்தில் பணிபுரிந்த அவர் 20 விழுக்காடு சம்பளக் குறைப்புடன் வாரத்தில் நான்கு நாள் வேலைக்கு மாறினார்.
உணவு நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்களுடன் ஆலோசனை நடத்தி இச்சட்ட முன்வரைவை உருவாக்க அவர் பெரிதும் உதவினார்.
வெளிநாட்டு ஊழியர்கள், அகதிகள், ஒற்றைப் பெற்றோர் போன்றோரின் நலனுக்காக சார்மைன் செயல்பட்டுள்ளார். நீ சூன் பகுதியில் துப்புரவுப் பணியாளர்களாக உள்ள வெளிநாட்டு ஊழியர்களின் குடும்பங்களை டாக்கா வரை சென்று சந்தித்து, அவர்களின் விசா உதவிகளுக்குக் கடிதங்கள் எழுதியுள்ளார்.
சார்மைன் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதாக நாடாளுமன்ற முன்னாள் துணைச் சபாநாயகர் சார்லஸ் சோங் பாராட்டியுள்ளார். இந்த அனைத்துலக அங்கீகாரம் சிங்கப்பூர் இளம் வழக்கறிஞர்களின் திறனை உலகுக்குக் காட்டுவதாகச் சட்டச் சங்கத் தலைவர் டான் செங் ஹான் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற சட்ட உதவியாளராகச் சில ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொள்கை மாற்றங்களைக் கற்றுத் தந்ததாகக் கூறிய சார்மைன், எதிர்காலத்தில் நேரடி அரசியலில் ஈடுபடும் வாய்ப்பையும் மறுக்கவில்லை.
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலைப் பட்டம் பெற்றுள்ள இவர், தற்போது ‘டிரான்சியன்ட் பேட்லர்ஸ் கவுன்ட் டூ’ ’ அமைப்பில் இணைந்து வெளிநாட்டு ஊழியரின் பாதுகாப்பான போக்குவரத்து, உணவின் தரம், சட்டவிரோதக் கையூட்டுகளுக்கு எதிரான கடுமையான தண்டனைகள் ஆகியவற்றுக்காகக் குரல் கொடுத்து வருகிறார்.