மத்திய அரசுக்கு எதிராக தவெக அரசு பேசுவதில்லை
மத்திய அரசுக்கு எதிராக தவெக அரசு பேசுவதில்லை - மாணிக்கம் தாகூர் விமர்சனம்
தவெக தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டமானது பெயர் வைப்பதற்கான கூட்டம் மட்டும் தான் என்று மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
Published : September 10, 2026 at 6:31 PM IST
சென்னை: மத்திய அரசுக்கு எதிராக தற்போதைய தவெக அரசு பேசுவதில்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியவர்கள், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் முன்னிலையில் அக்கட்சியில் இணையும் நிகழ்வு, சென்னை சத்யமூர்த்தி பவனில இன்று நடைபெற்றது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், “தமிழ்நாட்டை மத்திய மோடி அரசு எவ்வாறு வஞ்சித்து வருகிறது என்பதை நாடாளுமன்றத்தில் பேசி வருகிறோம். பாஜக அரசு தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பார்த்து வருகிறது.
தமிழ்நாட்டிற்கு இதெல்லாம் செய்திருக்கிறோம் என்று ஒரு அறிக்கையை பாஜக கொடுக்க வேண்டும். அநீதி செய்ய வேண்டும் என்பதே பாஜகவின் மரபணுவில் இருக்கிறது. தமிழ்நாடு அரசியலில் பாஜகவை புறக்கணிக்க வேண்டும். அவர்கள் சொல்லுகின்ற பொய்கள் பெரிதாக இருக்கிறது, தமிழ்நாட்டிற்கு நிறைய செய்திருப்பது போல பிம்பத்தை காட்டுகிறது.
பாஜக பற்றி பேசாமல் அனைவரும் திடீரென அமைதியாக இருக்கிறார்கள், எதிர்க்கட்சி தலைவர் அமைதியாக இருக்கின்றார், அதனை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் இருக்கிறோம். முதலில் பேசிக் கொண்டிருந்தவர்களே பேசவில்லை, தமிழ்நாட்டில் ஆளும் கட்சியும் பாஜக குறித்து பேச வேண்டும். ஆனால், மத்திய அரசுக்கு எதிராக தற்போதைய தவெக அரசு பேசுவதில்லை.
தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான கூட்டணியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அடுத்த கூட்டத்தில் பேசுவோம். நேற்று நடைபெற்ற கூட்டம் வெறும் பெயர் வைப்பதற்கான கூட்டம் மட்டுமே. மதசார்பற்றதன்மையை முன்வைத்து தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். 2021-க்கு முன் சிறுபான்மையினர் மீது அதிகப்படியான தாக்குதல் நடைபெற்றது. செப்டம்பர் 17-ஆம் தேதி, சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கூட்டம் காங்கிரஸ் சார்பில் நடைபெற இருக்கிறது” என்று கூறினார்.