📅 Saturday, 19 September 2026 IST | புரட்டாசி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 19, 2026 06:33 PM

மத்திய வட்டாரத்தில் சுகாதாரமற்ற நிலைக்குச் சென்ற காற்றுத்தரம்

மத்திய வட்டாரத்தில் சுகாதாரமற்ற நிலைக்குச் சென்ற காற்றுத்தரம்

சிங்கப்பூரில் காற்றுத்தரம் சனிக்கிழமை (செப்டம்பர் 19) பிற்பகலில் சுகாதாரமற்ற நிலைக்குச் சென்றது.

குறிப்பாக, மத்திய வட்டாரத்தில் 24 மணி நேரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு (பிஎஸ்ஐ) பிற்பகல் 1 மணிக்கு 102ஆக அதிகரித்து, 2 மணியளவில் 105 எனப் பதிவானது.

மாலை 5 மணியளவில் 108க்குக் சென்ற குறியீடு, இரவு 8.16க்கு 111ஐத் தொட்டது.

தாம்சன், மேரிமவுண்ட், சின் மிங், அங் மோ கியோ, பீஷான், சிராங்கூன் கார்டன்ஸ், மெக்ரிட்சி, தோ பாயோ போன்ற பகுதிகள் மத்திய வட்டாரத்தில் உள்ளன.

சிங்கப்பூரின் பிற பகுதிகளில் அந்தக் குறியீட்டின் அளவு சீராக அதிகரித்து வந்தாலும், தொடர்ந்து மிதமான நிலையிலேயே நீடித்தன.

மத்திய வட்டாரத்திற்கு அடுத்தபடியாக மேற்கு வட்டாரத்தில் அதிகபட்சமாக பிற்பகல் 1 மணிக்கு 90ஆக இருந்த காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு, பிற்பகல் 2 மணிக்கு 93ஆக அதிகரித்தது.

அதேபோல, சிங்கப்பூரின் தெற்கு வட்டாரத்தில் பிற்பகல் 1 மணிக்கு 75ஆக இருந்த குறியீடு, பின்னர் 78ஆக அதிகரித்தது.

24 மணிநேர காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீட்டின் அளவு 101 முதல் 200 வரை பதிவாகும்போது காற்றுத் தரம் சுகாதாரமற்றதாகக் கருதப்படுகிறது. அதேபோல, 51க்கும் 100க்கும் இடையில் குறியீட்டின் அளவு இருந்தால் காற்றின் தரம் மிதமானதாக இருக்கிறது என்று பொருள்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

50க்குக் கீழ் அந்த அளவு பதிவானால் மட்டுமே காற்றின் தரம் நன்றாக உள்ளது எனக் கருதப்படும்.

பிஎஸ்ஐ தவிர, மணிக்கு ஒருமுறை எடுக்கப்படும் பிஎம் 2.5 என்னும் அளவீடு சனிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் 67லிருந்து 117 என வேகமாக அதிகரித்தது. நண்பகலில் 149ஆக மேலும் அதிகரித்து, பின்னர் பிற்பகல் 2 மணிக்கு 120ஆகக் குறைந்தது.

காற்றில் கலந்துள்ள நுண்துகள்களின் நிகழ்நேர அளவைக் குறிக்கும் இந்த அளவீடு 56 முதல் 150 வரை இருந்தால் அதிகமாகவும் 151 முதல் 250 வரை இருந்தால் மிக அதிகமாகவும் கருதப்படுகின்றன.

உடனடி நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புவோர் ஒவ்வொரு மணிக்கும் பதிவாகும் பிஎம் 2.5 அளவீட்டையும், அன்றாடத் திட்டமிடலுக்கு 24 மணிநேர பிஎஸ்ஐ அளவீட்டையும் கவனித்து அதன்படி செயல்படுமாறு பொதுமக்களை வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.