📅 Saturday, 19 September 2026 IST | புரட்டாசி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 19, 2026 06:33 PM

உபி வீட்டில் முதியவர் சடலம்: காவல்துறை விசாரணை

உபி வீட்டில் முதியவர் சடலம்: காவல்துறை விசாரணை

உபி அவென்யூ 1, புளோக் 318ல் உள்ள ஒரு வீவக வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதை அண்டை வீட்டார் கவனித்ததைத் தொடர்ந்து 69 வயது முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் அவரது மகன் உயர்கல்விக்காக வெளிநாட்டிற்குச் சென்ற பிறகு அவர் வீட்டில் தனியாக வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

வியாழக்கிழமை (செப்டம்பர் 17) மாலை 6.45 மணியளவில், அது குறித்து காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

அந்த முதியவர் அசைவற்ற நிலையில் கிடந்ததுடன் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதை மருத்துவ உதவியாளர்கள் உறுதிப்படுத்தினர்.

சின் மின் டெய்லி செய்தியாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, குறைந்தபட்சம் காவல்துறை அதிகாரிகள் இருவர் அந்த வீட்டிற்குள் சென்று வருவதைக் கண்டனர்.

அந்த வீட்டின் கதவு, சன்னல்கள் திறக்கப்பட்டிருந்தன. நடைபாதையிலிருந்து அழுகிய துர்நாற்றம் வீசியது. சமையலறைத் தரையில் ரத்தக்கறைகள் எனச் சந்தேகிக்கப்படும் அடையாளங்களும் காணப்பட்டன.

தம் மகனுடன் சேர்ந்து காவல்துறையிடம் புகார் அளித்த சு என்ற 69 வயது பெண்ணிடம் சின்மின் செய்தியாளர்கள் பேசியதில் பல தகவல்கள் தெரியவந்தது.

கெட்டுப்போன உணவால் தன் சொந்த வீட்டிலிருந்து அந்த நாற்றம் வருவதாக அவர் முதலில் நினைத்துள்ளார். ஆனால், நெடி கடுமையாக இருந்ததால் அவர் சந்தேகமடைந்தார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

“நானும் என் மகனும் அந்த முதியவரின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதைக் கண்டுபிடித்தோம். உடனே நாங்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தோம்,” என்று அவர் கூறினார்.

ஏறத்தாழ 40 ஆண்டுகளாகத் தனது வீட்டில் வசித்து வருவதாகவும் இறந்துபோன அண்டை வீட்டாரான முதியவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் அங்குக் குடிவந்ததாகவும் திருவாட்டி சு பகிர்ந்துகொண்டார்.

அம்முதியவர் நட்புடன் பழகக்கூடியவர் என்று விவரித்த அவர், முதியவருக்குப் பார்வைக் குறைபாடு இருந்ததாகவும் நடப்பதற்கு ஊன்றுகோலைப் பயன்படுத்தியதாகவும் கூறினார்.

தனக்குத் தெரிந்தவரையில் அந்த முதியவருக்கு நான்கு பிள்ளைகள் இருப்பதாகவும் அவர் சொன்னார்.

இளைய மகன் வெளிநாட்டிற்குச் செல்லும்வரை அவருடனேயே தங்கியிருந்தார்.

அவர் தனியாக வாழத் தொடங்கி ஒரு மாதம் மட்டுமே ஆகியிருந்தது என்று அவர் மேலும் கூறினார்.

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இதில் சதித்திட்டம் எதுவும் இருப்பதாகச் சந்தேகிக்கப்படவில்லை என்று கூறிய காவல்துறை, விசாரணை நடைபெற்று வருவதாக ஏஷியா ஒன்னிடம் தெரிவித்தது.