மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா கூட்டத்தை கணிக்க தவறிய புதிய அதிகாரிகள்
குடமுழுக்கு விழாவுக்கு முந்தைய நாளே ஊரடங்கு உத்தரவுபோல் பொதுமக்கள், வாகனங்களை போலீஸார் அனுமதிக்காததால் வெறிச்சோடிய கீழமாசி வீதி.
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு வருகைதரும் பக்தர்கள் எண்ணிக்கையைக் கணிக்கத் தெரியாமல் 50 லட்சம் பேர் என தவறான தகவலை அரசுக்கு அளித்ததாலே, வழக்கத்துக்கு மாறாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அதிகாரிகளாகவும், 6,500 போலீஸார், வெளிமாவட்ட அதி்காரிகள் வரவழைக்கப்பட்டதாகவும் சர்ச்சை கள், விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு கடைசியாக 2009 ஏப்.8-ல் நடந்தது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு, நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்து முடிந்தது. மாசி, ஆவணி மூல வீதிகளில் தடுப்புகள் அமைத்து ‘பாஸ்’ வழங்கப்பட்ட உபயதாரர்கள், விஐபிகள், அரசியல் கட்சியினர், பக்தர்கள் உள்பட 11 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
குடமுழுக்கு விழாவில் உள்ளூர் பக்தர்கள் ‘பாஸ்’ கிடைக்காமலும், போலீஸாரி்ன் கெடுபிடிகள், கடுப்பாடுகளாலும் பங்கேற்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். கோயில் அருகேகூட செல்ல முடியாமல், கோயில் கோபுரம் தெரியும் வெளி வீதிகளில் பக்தர்கள் ஆங்காங்கே நின்று குடமுழுக்கை தரிசித்தனர்.
1963, 1974, 1995, 2009 ஆகிய ஆண்டுகளில் நடந்த குடமுழுக்கு விழாக்களில் தற்போதுபோல் கெடுபிடிகள், கட்டுப்பாடுகள் இல்லை என்று கூறப்படுகிறது. அதனால், கடந்த கால குடமுழுக்கு விழாக்களில் உள்ளூர் பக்தர்கள் அனைவரும் கோபுர மாடங்களில் மட்டுமில்லாது, மாசி, சித்திரை, வெளி வீதிகளில் நின்று தரிசனம் செய்தனர்.
ஆண்டுதோறும் நடக்கும் மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா மற்றும் குடமுழுக்கு விழாக்களில் உறவினர்கள், வெளி மாநில, வெளிமாவட்ட பக்தர்கள் திரள்வார்கள். மதுரையில் சித்திரைத் திருவிழாவில் மட்டுமே அதிகபட்சம் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நாளில் 5 லட்சம் பக்தர்கள் வரை திரள்வார்கள்.
அதன்படி மாநகராட்சி நிர்வாகமும், இந்து அறநிலையத் துறையும் 15 லட்சம் பக்தர்கள் வரை திரள வாய்ப்புள்ளதாகத் திட்டமிட்டு அவர்களுக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்வது வழக்கம்.
ஆனால், நேற்று முன்தினம் நடந்த குடமுழுக்கு விழாவில் வரலாற்றிலேயே இல்லாத வகையில், 50 லட்சம் பக்தர்கள் திரள வாய்ப்புள்ளதாக மாநகராட்சி கொடுத்த தகவலின்பேரில் நகராட்சி நிர்வாக இயக்குநர் தமிழக அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர் மூவரும் மதுரைக்குப் புதியவர்கள் என்பதால் குடமுழுக்கு விழாவுக்கு திரளும் கூட்டத்தைக் கணிக்கத் தவறி இருக்கலாம், அதேநேரம், அவர்கள் மதுரையை நன்கறிந்த கீழ்நிலை அதிகாரிகளின் கருத்துகளைக் கேட்டு சரியான தகவலை அரசுக்குத் தெரிவித்து இருக்கலாம்.
மூன்று துறையினரும் கணிக்கத் தவறியதோடு மிகப்பெரிய எண்ணிக்கையில் பக்தர்கள் திரள வாய்ப்புள்ளதாகக் கூறியதாலேயே மீண்டும் கரூர் போன்று நெரிசல் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதை மனதில் வைத்து மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மூவரை கண்காணிப்பு அலுவலர்களாக அரசு நியமித்தது.
6,500 போலீஸார் ஐந்து அடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதுவரை இல்லாத வகையில் குடமுழுக்கு விழா பணிகளுக்காக கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, சிவகாசி, தூத்துக்குடி, திண்டுக்கல் ஆகிய மாநகராட்சிகளில் இருந்து 1,000 தூய்மைப் பணியாளர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் கீழ்நிலை அலுவலர்கள் வரவழைக்கப்பட்டனர்.
மேலும், வழக்கத்துக்கு மாறான கட்டுப்பாடுகள், பாதுகாப்புக் கெடுபிடிகளால் உள்ளூர் பக்தர்கள் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க முடியாமல் சிரமப்பட்டதாகவும், மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் இரவு, பகலாக உழைத்தது விரயமான தாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கள் கூறியதாவது: குடமுழுக்கு விழாவுக்காக மாநகராட்சி ஏற்பாடு செய்த பெரும்பாலான தற்காலிக கழிப்பறைகள் பயன்பாடு இல்லாமல் போனது. 203 பிளாஸ்டிக் குடிநீர் தொட்டிகளில் இரண்டாவது முறையாக நீர் நிரப்பப்படவில்லை. பாதுகாப்புக் கெடுபிடியால் பக்தர்கள் வராமல் 74 வாகன நிறுத்துமிடங்களில் பெரும்பாலானவை வெறிச்சோடின.
50 லட்சம் பக்தர்கள் வரை வர வாய்ப்புள்ளதாகக் கூறியதாலே அனுபவம் இல்லாத அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பேரிடர் காலங்களைப்போல கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடு களைச் செய்தனர்.
செப்.16-ம் தேதி பிற்பகல் 3 மணி முதல் மாசி வீதிகள், சித்திரை வீதிகள் மற்றும் முக்கியச் சாலைகள் அனைத்தும் காவல்துறையினரால் தடுப்புகள் அமைக்கப்பட்டு தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.
குடமுழுக்குப் போன்ற விழாக்காலங்களில் கடைகளைத் திறந்து வைத்தால் வியாபாரம் அதிகளவில் நடைபெறும். ஆனால், மாசி வீதிகளில் உள்ள பெரிய கடைகள், சிறிய கடை கள், டீ, வடை கடைகள், இட்லி கடைகள் அடைக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்தும் இல்லாமல் ஊரடங்கு போன்று வெறிச்சோடிக் காணப்பட்டது. கோயில் பக்கமே யாரும் போக முடியாது என்ற எண்ணம் ஆழமாக பதியும் வகையில் அரசின் நடவடிக்கை இருந்தது.
சித்திரைத் திருவிழாக் காலங்களில் மாசி, சித்திரை வீதிகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்தத் தடையுமின்றி சுவாமியை தரிசனம் செய்ததுதான் பெருமையும், வரலாறுமாக இருந்தது. விஐபிக்கள் சிரமமின்றி கும்பாபிஷேகத்தை பார்த்து திரும்ப வேண்டும்.
அதுவரை யாரையும் அனுமதிக்கக்கூடாது. கோயிலை சுற்றியுள்ள சித்திரை வீதி உள்ளிட்ட தெருக்களில் பக்தர்களை அனுமதித்தால் பெரிய அளவில் நெரிசல் ஏற்பட்டு அசம்பாவிதம் நடந்துவிடும். இதை தவிர்க்க வேண்டும் என்ற இந்த இரண்டு விஷயங்களை மையப்படுத்தியே 90 சதவீத ஏற்பாடுகள் இருந்தன.
இதனால் நேரடி கோபுர தரிசனம், புனித நீர் தெளிப்பு, கோயிலுக்குள் மூலவர் தரிசனம் என எதுவும் முழுமையாக பெரும்பாலான பக்தர்களுக்கு கிடைக்காததால் ஏமாற்றமே மிஞ்சியது. ஆண்டுதோறும் திருக்கல்யாணத்தின்போது கிடைத்த திருப்திகூட கும்பாபிஷேகத்தில் கிடைக்கவில்லையே என பக்தர்கள் புலம்புவதை வெளிப்படையாக காண முடிந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.