📅 Friday, 21 August 2026 IST | ஆவணி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 21, 2026 12:03 AM

முதல்-அமைச்சர் விஜய் ஒரு கார் பிரியர்

முதல்-அமைச்சர் விஜய் ஒரு கார் பிரியர்

பொருளாதார பலமில்லாமல் சட்டசபை உறுப்பினர்களாக பணியாற்றும் மற்றும் முதல் முதலாக சட்டசபை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தங்களது மக்கள் பணியை தொய்வின்றித் தொடர்வதற்கும், அவர்கள் தங்களின் தொகுதிப் பணிகளைத் திறம்பட மேற்கொள்வதற்கும் வசதியாக அனைத்து உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும்.

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அரசு வாங்கி வழங்கும் வாகனத்தை பராமரிக்கும் விதமாக, வாகனத்திற்கு ஓட்டுநர், எரிபொருள், வாகனப் பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களுக்காக மாதந்தோறும் ரூ. 75,000 வாகனப் படியாகவும், அலுவலகப் பணிகளில் உதவிசெய்ய ஓர் உதவியாளரை நியமித்துக் கொள்ள மாதந்தோறும் ரூ. 25000 உதவியாளர் படியாகவும் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கார் வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்கள். இது முதல்முறை, எந்த முதல்-அமைச்சரும் செய்யாதது. அதை நாங்கள் வரவேற்கிறோம். கார் இல்லாத எம்.எல்.ஏக்களுக்கு வழங்கலாம்.

இதற்கு அரசுக்கு ரூ. 150 கோடிக்கு மேல் செலவாகும். என்னுடைய மனதில் இருப்பதைச் சொல்கிறேன். தமிழ்நாட்டில் ஏராளமான பிரச்சினைகள் இருக்கின்றன. தற்போதுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு 90% அளவில் வாகனம் இருக்கின்றது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தவெக உறுப்பினர்களுக்கும் ஒரு சிலருக்கும் வாகனம் இல்லை.

ரூ. 150 கோடியை விவசாயிகளின் முழுக்கடன் தள்ளுபடிக்கு ஒதுக்கிருந்தால், நன்றாக இருந்து இருக்கும். மக்கள்தேவையே நிறைய இருக்கிறது, அதிலெல்லாம் கவனம் செலுத்த வேண்டும்.

குடும்ப அட்டைதாரர்கள் இருக்கும் இடத்தில் புதிய ரேஷன் கடைகளை திறக்க வேண்டும். ரேஷன் பொருட்கள் தட்டுபாடின்றி கிடைக்க வேண்டும். மக்காசோளாம், கேழ்வரகு, கம்பு, நவதானிய பொருட்களை வினியோகம் செய்ய வேண்டும். பயோ மெட்ரிக் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும், நெல் உடனடியாக கொள்முதல் செய்யப்பட்டு அதை உரிய கிடங்குகளில் பாதுகாக்கப்பட்டு உரிய நேரத்தில் அதனை மக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும். ரேஷன் பொருட்களில் இன்றும் கூட எடை பிரச்சினை உள்ளது.

பால்கொள்முதல் விலையில் ரூ.3 உயர்த்தி இருக்கிறார்கள் அதனை இன்னும் உயர்த்தி இருக்கலாம். ஏழை மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கலாம்.

இந்தியாவில் யாரும் செய்யாததை முதல்-அமைச்சர் செய்து உள்ளார். அதனை தேமுதிக வரவேற்கிறது. முதல் -அமைச்சர் விஜய் ஒரு கார் பிரியர். தவெகவில் எல்லாரும் கார் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதால் அதனை நிறைவேற்றி உள்ளார்.

திருநெல்வேலியில் கங்கைகொண்டானில் 4 பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியாருக்கு தூக்கு தண்டனை வழங்கி இருக்கிறது நீதிமன்றம். அந்த நீதியரசர்களுக்கு தலைவணங்கி வாழ்த்துகளை பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.