Magudam Day 6 Box Office
சென்னை: விஷாலே இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் மகுடம். இதில் அவருடன் அஞ்சலி, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. கடந்த வாரத்தில் வெளியான திரைப்படம் மோசமான விமர்சனங்களையே பெற்றது. இந்நிலையில் அதன் ஆறாவது நால் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அர்ஜுனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் விஷால். திடீரென கால சூழ்நிலையால் அவர் ஹீரோவாகிவிட்டார். செல்லமே, சண்டக்கோழி, தாமிரபரணி என வரிசையாக ஹிட் படங்களில் நடித்த அவருக்கு இடையே சறுக்கல் ஏற்பட்டது. அந்த சறுக்கல் பல வருடங்களுக்கு பிறகு மார்க் ஆண்டனி திரைப்படத்தில் சரியானது. சூழல் இப்படி இருக்க இயக்குநராகும் ஆசை அவருக்குள் இருந்ததால்; தொடர்ந்து அதற்கான வேலைகளிலும் இறங்கினார். முதலில் துப்பறிவாளன் 2 படம்தான் அவர் இயக்கத்தில் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
விஷாலின் மகுடம்: ஆனால் அதற்கும் முன்னதாக மகுடம் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் கதையை ஈட்டி உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ரவி அரசு எழுதியிருக்கிறார். திரைக்கதையும், இயக்கமும் விஷாலுடையது. இத்லி அவருடன் அஞ்சலி, துஷாரா விஜய, ஜான் விஜய் என பலர் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. முதன்முறையாக விஷால் இயக்கிய படம் என்பதால் இதன் மீது ஓரளவுக்கு ஹைப் இருந்தது.
படம் எப்படி?: ஆனால் அந்த ஹைப்பை துளிக்கூட நிறைவேற்றவில்லை. பழைய காலத்து பழி வாங்கல் கதையில், கடத்தல், தந்தை - மகன் பாசம் என பழைய கச்சா பொருட்களையே சேர்த்து கொடுத்திருந்தார் விஷால். ஆட்டோ மொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடத்தல் மட்டும் கொஞ்சம் புதுமையாக இருந்தது. ஆனால் அதையும் முழுதாக சொல்லவில்லை. திரைக்கதைக்கும், கதைக்கும் சம்பந்தமே இல்லாதது மாதிரிதான் இருந்தது. படம் பார்த்த பலரும் கழுவி கழுவி ஊற்றினார்கள்.
ட்ரோலும் உண்டுதான்: கடுமையாக விமர்சிப்பது மட்டுமின்றி ட்ரோலும் செய்கிறார்கள். அதுவும் ரிலீஸுக்கு பின்பு விஷால் தரப்பிலிருந்து BTS வீடியோக்கள் எல்லாம் வெளியிடப்படுகிறது. அதை பார்த்த ரசிகர்களோ, இவ்வளவு மூச்சை போட்டு உழைத்திருக்கிறார். ஆனால் அது அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது; அதுமட்டுமின்றி இவரைவிட கஷ்டப்பட்டு படம் எடுத்த இயக்குநர்கள் எல்லாம் அமைதியாக இருக்கும்போது இவர் மட்டும் ஏன் இப்படி இருக்கிறார் என்றெல்லாம் கிண்டல்கள் பறக்க தொடங்கியிருக்கின்றன.
வசூல் நிலவரம்: விமர்சன ரீதியாக படம் படு பாதாளத்துக்கு சென்றுவிட்டது. சரி வசூலிலாவது காப்பாற்றுமா என்று பார்த்தால் அதுவும் இல்லை என்றே தெரிகிறது. Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தகவல்படி, ஆறாவது நாளான நேற்று வெறும் 12 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலித்திருக்கிறதாம். இதுவரை மொத்தம் இரண்டு கோடியே 17 லட்சம் ரூபாயை மட்டுமே பாக்ஸ் ஆஃபிஸில் வசூலித்திருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த வசூல் ரொம்பவே மோசம் என்பதால்; விஷாலின் கரியரில் மகுடம் பெரிய தோல்வி படம் என்ற லிஸ்ட்டில் சேர்ந்துவிட்டது. மீண்டு வாருங்கள் விஷால்..