📅 Friday, 28 August 2026 IST | ஆவணி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 28, 2026 11:04 AM

முதல்-அமைச்சர் விஜய் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு

முதல்-அமைச்சர் விஜய் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு

சட்டசபைத் தேர்தலில் தமிழ்நாடு முதல்-அமைச் சர் விஜய், பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.

பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இந்த 2 தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், பெரம்பூர் தொகுதியில் வாக்காளர்கள் லட்சுமி நரசிம்மன், தினேஷ் ஆகியோரும், திருச்சி கிழக்கு தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜும் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தனர்.

அதேபோல, வில்லிவாக்கம் தொகுதியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், வாக்காளர் ஆர்.சிவராஜ் என்பவர் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்குகளை நீதிபதி வி.லட்சுமி நாராயணன் விசாரித்து வருகிறார்.

இதனிடையே இந்த தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக்கோரி மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்த நீதிபதி, தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரி 27-ந்தேதிக்குள்(நேற்று) மனு தாக்கல் செய்யவேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.

இந்த தேர்தல் வழக்குகள் எல்லாம் நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தங்களுக்கு எதிரான தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக விஜய், ஆதவ் அர்ஜுனா தரப்பில் கூறப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, "முதல்-அமைச்சர் விஜய் தேர்தல் வெற்றியை எதிர்த்து வாக்காளர் தினேஷ் தொடர்ந்த வழக்கும், ஆதவ் அர்ஜுனா வெற்றியை எதிர்த்து சிவராஜ் தொடர்ந்த தேர்தல் வழக்குகளும் இன்று(வெள்ளிக்கிழமை) விசாரிக்கப்படும், விஜய் வெற்றியை எதிர்த்து இனிகோ இருதயராஜ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் தொடர்ந்த தேர்தல் வழக்கு வருகிற 31-ந்தேதி விசாரிக்கப்படும்" என்று உத்தரவிட்டார். இதன்படி முதல்-அமைச்சர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோரின் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்குகள் இன்று விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.