நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்- தனித்தீர்மானம் கொண்டு வரும் தமிழ்நாடு அரசு
நீட் தேர்வு முறையை கைவிட, மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் வலியுறுத்துகிறது.
Published : August 10, 2026 at 11:54 PM IST
சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், அரசு செவ்வாய்க்கிழமை (ஆக.11) தனித் தீர்மானம் கொண்டு வரவுள்ளது.
இந்த தீர்மானத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கோ.க. அருண்ராஜ் முன்மொழிய உள்ளார்.
அந்த தீர்மானத்தில், "நீட் தேர்வு முறை சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்கு எதிரானது. இது மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. தமிழ் வழியில் படிக்கும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை இத்தேர்வு சிதைக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் வாய்ப்புகளையும் இது பெரிதும் பாதிக்கிறது.
நீட் தேர்வால் அதிக கட்டணம் வசூலிக்கும் பயிற்சி மையங்கள் பெருகியுள்ளன. இதனால் பள்ளிப் பாடத்திட்டத்தின் மீதான மாணவர்களின் கவனம் சிதறடிக்கப்படுகிறது. 12 ஆண்டு காலப் பள்ளி கல்வியை விடுத்து, ஒரு நாள் நுழைவுத்தேர்வே உயர் கல்வியைத் தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நீட் தேர்வில் இருந்து மாநிலத்திற்கு விலக்கு அளிக்கும் வகையில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் சட்டமுன்வடிவு ஒருமனதாக நிறைவேற்றி இருந்தும், குடியரசுத் தலைவரால் ஏற்பிசைவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளால் 2026 இளநிலை நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடத்தப்பட்டதால் லட்சக்கணக்கான மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர். பல இளம் உயிர்கள் பறிபோனதால், மாணவர்கள் இத்தேர்வு முறையின் மீது நம்பிக்கையை இழந்துவிட்டனர். எனவே, இந்த தேர்வு முறை அகற்றப்பட வேண்டும்.
இதற்காக, மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். தேசிய அளவில் நீட் தேர்வு முறையைக் கைவிட வேண்டும். எப்போதும் போல 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என இத்தீர்மானம் ஒருமனதாக வலியுறுத்துகிறது" என்று அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா-2026ஐ அதன் தற்போதைய வடிவில் திரும்ப பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தி ஒரு தனித்தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. இந்த தீர்மானத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தாக்கல் செய்ய உள்ளார்.