📅 Tuesday, 11 August 2026 IST | ஆடி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 11, 2026 01:02 AM

தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள், அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவது கட்டாயம்: அனைத்து கட்சிகள் ஆதரவுடன் சட்டப்பேர

தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள், அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவது கட்டாயம்: அனைத்து கட்சிகள் ஆதரவுடன் சட்டப்பேர

தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள், அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவது கட்டாயம்: அனைத்து கட்சிகள் ஆதரவுடன் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில், நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயமாக பாடப்பட வேண்டும் என சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் நேற்று தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது.

தமிழக சட்டசபையில், தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான அரசினர் தனி தீர்மானத்தை முன்மொழிவதற்கு முன் முதல்வர் விஜய் பேசியதாவது:

மொழி எப்பவும் தொடர்புக்கான ஒன்றுதான். ஆனால், நம்முடைய தமிழ் வெறும் மொழி மட்டும் அல்ல. பேசினால் வரும் ஓசையும் இல்லை. தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல; அது நம்ம உயிர், நம் உணர்வு. நம்மை பெற்ற தாயை அம்மா என்று சொல்லும்போது பாசமும், சொந்தமும் நம்மை அறியாமலேயே உயிராக, உறவாக, உணர்வாக தானாக உள்ளே தோன்றுவதுபோல, அதே மாதிரி ஏன் இன்னும் ஒருபடி மேலே போய் சொல்லலாம். தாயை போன்று புனிதமானது தாய்மொழி. தாயை போற்றுகிற, வாழ்த்துகிற தமிழ்நாட்டு மண், தமிழ்த்தாய் வாழ்த்தை எப்படி விடும்? விடாது, விடவும் மாட்டோம்.

தமிழ்த்தாய் வாழ்த்தை 1891ல் எழுதிய மனோன்மணியம் சுந்தரனார் நம்முடைய தமிழ் மொழியை தமிழ்த்தாய் என்று உயர்வாக சொல்லி பாடினார். இந்திய துணை கண்டத்தை, ஒன்றியத்தை அழகிய முகமாக சொன்ன மனோன்மணியம் சுந்தரனார், அந்த முகத்தோட நெற்றியில் வைக்கும் பொட்டுதான், திலகம் தான் தமிழ்நாடு என்று சொன்னார். இந்தியாவின் நெற்றியில் இருக்கிற பொட்டு மாதிரி ஒரு வெற்றி பொட்டாக இருப்பதுதான் தமிழ்நாடு. அந்த பொட்டோட நறுமணம் உலகம் முழுவதும் பரவுகிற மாதிரி, தமிழோட புகழும் உலகம் முழுவதும் பரவும் என்று சொன்னார். உண்மைதானே அது.

இன்று தமிழ் பேசும் மக்கள் இல்லாத நாடுகளே வெகுகுறைவு தானே. தமிழும், தமிழனும் இல்லாத நாடு எது?. தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல; பண்பாடு அது நாகரிகம், சிந்தனை, அது ஒரு அன்பு. தமிழ் என்றால் விருந்தோம்பல். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் பவர். அந்த தமிழோட புகழை சொல்லக்கூடிய தமிழ்த்தாய் வாழ்த்தில், ‘அனைத்துலகமும் இன்புமுற’ என சொல்லி உலகத்தையே நம் தமிழ் உயர்த்திப்பிடிக்கிறதே தவிர, எந்த மொழி, இனம், மதம், தனி மனிதனையும் தாழ்த்தி பேசவில்லை. யாரையும் கொஞ்சம்கூட காயப்படுத்தவில்லை. நம் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பெயர் இருக்கும். அந்த பெயரை ஒரு கூட்டத்தில் சொன்னால் அந்த ஒருத்தர் மட்டும் தான் திரும்பி பார்ப்பார். ஆனால் தமிழ், தமிழ் என்று சொன்னால் ஒட்டுமொத்தமாக நாம் எல்லோரும் திரும்பி பார்ப்போம். அப்படி நம் எல்லோருக்கும் இருக்கும் பொதுப்பெயர் அது.

உயர்த்திப்பிடிக்கும் தமிழை பின்னாடி தள்ளினால் தமிழ்நாடு எப்படி பொறுத்து இருக்க முடியும்?. ஒரு கட்சிக்கு பிரச்னை என்றால் சம்பந்தப்பட்ட கட்சி மட்டும்தான் போராடும். ஆனால் தமிழ் என்று சொன்னால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒன்றாக நிற்கும். அதனால் தான் சொல்கிறோம். தமிழ் என்றால் உயிர், உணர்வு. தமிழின் அடையாளம்தான் நம் தமிழ்த்தாய் வாழ்த்து. ஒட்டுமொத்த பன்முகத்தன்மையை உயரத்தி பேசும் தமிழ்த்தாய் வாழ்த்து, நம்முடைய ஊரில், தமிழ்நாட்டில் முதல் இடத்தில் தான் இருக்கவேண்டும். இந்திய அரசியல் சாசனமே ஒவ்வொரு மாநிலத்தின் மொழிக்கும், பண்பாட்டுக்கும், பாரம்பரியத்துக்கும் பாதுகாப்பு உரிமை கொடுத்திருக்கிறதுதானே. அந்த உரிமையின் அடிப்படையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு உரிமை கொடுத்து தானே ஆகவேண்டும். அதுதானே மாநில உரிமை.

அப்படிப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தை தான் 1970 நவம்பர் 23 முதல் அரசு விழாக்களில் முதலில் பாட வேண்டும் என்று ஒரு அரசாணையை போட்டு அது செயல்பாட்டுக்கு வந்தது. அதற்கு அப்புறம் 2021 டிசம்பர் 12ம் தேதி மாநில பாடலாக அங்கீகாரம் வழங்கப்பட்டது. அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்பு நிகழ்ச்சிகளில் தமிழ்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்று அரசாணை உள்ளது. 2026ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி ஒன்றிய அரசின் கடிதத்தில் அரசு விழாக்களில் பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள் வெளியிடப்பட்டது. அந்த ஆணையில் மாநில பாடல் பற்றி எந்த வழிமுறையும் இல்லாமல் இருந்தது.

நம்முடைய அரசு பொறுப்பேற்றதும் கடந்த மே மாதம் 27ம் தேதி பிரதமருக்கு, மாநில பாடலுக்கு உரிய அங்கீகாரம் வேண்டும் என்றும், ஒன்றிய அரசு வெளியிட்ட ஆணைக்கு திருத்தம் வெளியிட வேண்டும் என்றும், மாநில விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதற்கான வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் கடிதம் எழுதியிருந்தோம். தமிழ்த்தாய் வாழ்த்தின் மரியாதையை பாதுகாப்பதில் தவெக அரசு ஒரு போதும் சமரசம் செய்யவே செய்யாது. தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவது அரசியல் அமைப்பிற்கும், இந்திய ஒற்றுமைக்கும் எதிரானது இல்லை. மாறாக வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவோட உயர்ந்த கொள்கையை வெளிப்படுத்துவது. மேலும் தமிழ்தாய் வாழ்த்தை முதலில் பாட வேண்டும் என்று சொல்வது, அரசியல் சம்பந்தமான விவாதமாக மாற வேண்டும் என்ற அவசியமே இல்லை. இது தமிழர்களின் பொது அடையாளம். நம்மை வேறுபடுத்துவது அல்ல, ஒன்றிணைப்பது. தமிழ்த்தாய் வாழ்த்தின் கண்ணியத்தையும், தமிழின் தொன்மையையும், தமிழர் பண்பாட்டின் பெருமையையும் பாதுகாக்கும் இந்த உயரிய பணியில் இந்த சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும், கட்சி வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் கட்டாயமாக முதலில் பாடப்படவேண்டும் என்று கொண்டுவரப்படும் இந்த தீர்மானத்துக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை தொடர்ந்து முதல்வர் விஜய், அரசினர் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

அந்த தீர்மானத்தின் விவரம் வருமாறு:

மனோன்மணியம் சுந்தரனாரால் 1891ல் எழுதப்பட்ட ‘மனோன்மணியம்’ என்ற நாடக நூலின் பாயிரத்திலிருந்து எடுக்கப்பட்ட ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ 1970 நவம்பர் 23 முதல் அரசு விழாக்களில் முதலில் பாடப்படவேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 2021 டிசம்பர் 12 முதல் மாநிலப் பாடலாக அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டு தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படும் என்று ஆணையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தால் 2026 ஜூலை 9ம் தேதிய கடிதத்தில், மாநிலப் பாடல் பாடப்படுவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ தமிழ்மொழிக்கும் தமிழர், பண்பாட்டிற்கும் செலுத்தப்படும் மரியாதையின் வெளிப்பாடாகும் என்பதை இப்பேரவை வலியுறுத்துகிறது. இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில், தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில், தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் அரசு உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என தமிழ்நாடு சட்டசபை ஏகமனதாக தீர்மானிக்கிறது. இவ்வாறு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர் விஜய், அனைத்து கட்சிகளை சார்ந்த உறுப்பினர்களும் இந்த தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டுகிறேன் என்றார். இதை தொடர்ந்து பேசிய அனைத்து கட்சி உறுப்பினர்களும் தீர்மானத்தை ஆதரித்து பேசினர்.

உறுப்பினர்கள் பேசியதை தொடர்ந்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், ‘அரசினர் தீர்மானத்தை முதல்வர் முன்மொழிந்திருக்கிறார். இதை யாருக்கும் அனுப்பி அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இது சட்டசபையின் தீர்மானம். ஏகமானதாக நிறைவேற்றப்படும் தீர்மானம். முதல்வரின் இந்த குரல் சட்டசபையின் குரல் மட்டுமல்ல; ஒட்டுமொத்த உலக தமிழ் மக்களின் குரலாக எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்றார். அதன் பிறகு முதல்வர் கொண்டுவந்த அரசினர் தீர்மானம் சட்டசபையில் திமுக, அதிமுக, த.வெ.க உட்பட அனைத்து கட்சியினரின் ஆதரவுடன் ஒரு மனதாக குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது.

முதல்வர் கொண்டு வந்த அரசினர் தீர்மானம் மீது உறுப்பினர்கள் பேசியதாவது:

கோவி.செழியன் (திமுக): தி.மு.க. சார்பில் அரசினர் தீர்மானத்தை நான் வழிமொழிகிறேன். ஆதரிக்கிறேன். ஆனால் அடிக்கடி மாறும் இந்த சூழலை மாற்றிட முதல்வரும், இந்த சட்டசபையும், சபாநாயகரும் அதை சட்டமாக்கி தந்தால், எவரும் இந்த தவறுக்கு துணை போக மாட்டார்கள். நிலையான, உறுதியான, இரும்புத்தன்மையான அதிகாரம் கிடைக்கும்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): அரசியலில் நமக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் தமிழ் என்று வரும்போது நாம் அனைவரும் தமிழர்கள். தமிழின் உரிமை என வரும் போது இந்த சட்டசபை ஒரே குரலில் ஒலிக்க வேண்டும். அரசு உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என்ற அரசின் தனித்தீர்மானத்தை அதிமுக சார்பில் முழுமையாக ஆதரிக்கிறேன்.

அமைச்சர் விஸ்வநாதன் (காங்கிரஸ்): தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில அரசு விழாக்களில் முதலில் பாடவேண்டும் என சட்டசபையில் ஏகமனதாக முதல்வர் முன்மொழிந்த அரசினர் தீர்மானத்தை நான் ஆதரிக்கிறேன். வரவேற்கிறேன்.

அமைச்சர் வன்னி அரசு (வி.சி.க.): வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம். தமிழர் அடையாளத்தை, மொழியை, பண்பாட்டை, தேசிய இனத்தின் அடையாளத்தை உலகத்துக்கு பறைசாற்றும் தனித்த தீர்மானம் இது. முதல்வர் முன்மொழிந்த இந்த தீர்மானத்தை விசிக சார்பில் நாங்கள் வரவேற்கிறோம்.

சிவக்குமார் (பாமக): தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான அரசினர் தீர்மானத்தை பாமக சார்பில் வரவேற்கிறேன். முழு ஆதரவையும் தெரிவிக்கிறோம். அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்படவேண்டும் என்ற சுற்றறிக்கையை மத்திய அரசு வெளியிட தமிழக அரசு அழுத்தம் கொடுக்கவேண்டும். அப்படி இல்லையென்றால், தனிச்சட்டம் கொண்டுவரவேண்டும்.

மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்): தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்று முதல்வர் கொண்டு வந்திருக்கிற தனித்தீர்மானத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் வாழ்த்துகளை தெரிவிப்பதோடு, இந்த தீர்மானத்தை மனதார வரவேற்கிறது.

அமைச்சர் ஷாஜஹான் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்): முதல்வர் கொண்டு வந்திருக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த தனித்தீர்மானத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மனதார வரவேற்கிறேன்.

அமைச்சர் ராஜ்மோகன் (தவெக): இது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமல்ல. உலகத்தாய் வாழ்த்து. இதை சட்டசபையில் சொல்வதை பெருமை கொள்கிறேன். அப்படிப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதல்வர் கொண்டு வந்திருக்கும் தனித்தீர்மானத்துக்காக அவரை இருகரம் கூப்பி வணங்கி வாழ்த்துகிறேன்.

செல்லச்சாமி (மார்க்சிஸ்ட்): முதல்வர் முன்மொழிந்திருக்கும் அரசினர் தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரவேற்கிறேன். தீர்மானத்தோடு நின்றுவிடாமல் சட்டமாக இயற்றப்பட வேண்டும். இவ்வாறு உறுப்பினர்கள் பேசினர்.

அனைத்துக் கட்சிகளுக்கும் முதல்வர் விஜய் நன்றி

முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: தமிழ் ஒரு மொழி மட்டுமன்று, அது ஒரு சிந்தனை-பண்பாடு-நாகரிகம்-அதோடு தமிழ் நம் உயிர்; தமிழ் நம் உணர்வு என்பதை முழுமையாக உணர்ந்ததே நமது தமிழ்நாடு அரசு. மேலும், தமிழ் மொழியின் தொன்மை, தனித்தன்மை, பெருமை, சிறப்பு மற்றும் தமிழர்களின் உணர்வை போற்றி பாதுகாக்கும் வகையிலான இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம், தமிழ்த்தாய்க்கு செலுத்தப்படும் உயரிய மரியாதையாகும். இத்தீர்மானம் நிறைவேற்றிய இந்நன்னாள் தமிழ்நாட்டின் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். இந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஆதரித்து நிறைவேற்றித் தந்தமைக்காக என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உலகெங்கும் தமிழ்த்தாயின் புகழ் ஓங்கட்டும்! தமிழ்நாட்டின் வெற்றிப் பயணம் தொடரட்டும்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.