“ஓராண்டாக விளையாட முடியவில்லை”.. 25 வயதில் ஓய்வை அறிவித்த இங்கிலாந்து பவுலர் ஜான் டர்னர்
“ஓராண்டாக விளையாட முடியவில்லை”.. 25 வயதில் ஓய்வை அறிவித்த இங்கிலாந்து பவுலர் ஜான் டர்னர்
லண்டன்: இங்கிலாந்து அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான 25 வயது ஜான் டர்னர், தொடர் காயம் காரணமாக அனைத்து வகையான தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்துள்ளார். இவரது இந்த திடீர் முடிவு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2024 அக்டோபர் - நவம்பர் மாதங்களில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமான ஜான் டர்னர், 2 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த 2025 ஜூன் மாதத்திற்குப் பிறகு முதுகுப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான எலும்பு முறிவு காரணமாக அவர் எந்த ஒரு போட்டியிலும் விளையாடவில்லை. ஓராண்டுக்கும் மேலாகப் போராடியும் காயம் குணமடையாததால், அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்த கடினமான முடிவை எடுத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகளில் 2 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் ஒரு விக்கெட்டையும் ஜான் டர்னர் வீழ்த்தியுள்ளார். கடந்த 2021 முதல் ஹாம்ப்ஷயர் கவுண்டி அணிக்காக விளையாடி வரும் டர்னர், 2023 உள்நாட்டு டி20 தொடரில் 11 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலமே அவருக்கு இங்கிலாந்து தேசிய அணியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.
தனது ஓய்வு குறித்து உருக்கமாகப் பேசிய ஜான் டர்னர், "இங்கிலாந்து மற்றும் ஹாம்ப்ஷயர் அணிக்காக விளையாடியது எனது சிறுவயது கனவு. ஆனால், முதுகு வலி காரணமாக கடந்த ஓராண்டாக விளையாட முடியாமல் போனது எனது எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வைத்தது. இது நான் எடுத்த மிகக் கடினமான முடிவுகளில் ஒன்றாகும்" என்றார்.
ஜான் டர்னரின் ஓய்வு குறித்து ஹாம்ப்ஷயர் கிரிக்கெட் இயக்குனர் கில்ஸ் ஒயிட் கூறுகையில், "ஜான் டர்னர் மிகவும் திறமையான வீரர். அவரது கிரிக்கெட் வாழ்க்கை இவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வந்தது வருத்தமளிக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் ஹாம்ப்ஷயர் அணி 4 முறை டி20 இறுதிப்போட்டிக்குச் செல்லவும், கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் முதல் இடத்திற்குப் போட்டியிடவும் அவர் முக்கியப் பங்காற்றியுள்ளார். அவரது எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.