பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வது குறித்து ஆலோசனை
பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வது குறித்து ஆலோசனை - வேளாண் துறைச் செயலாளர் சங்கர் தகவல்
'எல் நினோ'வால் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published : August 6, 2026 at 9:41 PM IST
சென்னை: விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக வேளாண் மற்றும் உழவர் நலத்துறைச் செயலாளர் சங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஆக.06) வேளாண் பட்ஜெட் குறித்து விவரிப்பதற்காக வேளாண் மற்றும் உழவர் நலத்துறைச் செயலாளர் சங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், "தமிழ்நாடு 'மண்வள பாதுகாப்பு இயக்கம்' ரூபாய் 600 கோடியில் நடப்பாண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பசுந்தீவனங்கள் 75% மானியமாக வழங்கப்படுகிறது. உழவு மானியமாக ஏக்கருக்கு 3,000 ரூபாய் முதல் முறையாக வழங்கப்பட உள்ளது. நெல் உற்பத்தி மானியத்திற்கு ரூபாய் 34 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பருத்தியின் பரப்பு குறைவதால் தேவை அதிகரிக்கிறது. பருத்தியின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 27 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
நெல் உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கு மத்திய அரசு மானியம் வழங்குவது வழக்கம். இந்த ஆண்டு மானியம் வழங்குவதை மத்திய அரசு நிறுத்திவிட்டது. மத்திய அரசு நிறுத்திய மானியத்தை வழங்க தமிழ்நாடு அரசு ரூபாய் 34 கோடியை ஒதுக்கியுள்ளது. இதன்மூலம் நெல் சாகுபடியின் பரப்பளவு இனி குறையாமல் இருக்கும்.
பயிர்களைச் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டும் வகையில் காட்டுப்பன்றிகளை விரட்ட பிரத்யேகமாக கெமிக்கல் வழங்க உள்ளோம். சீமை கருவேல மரங்களை அகற்றுவதன் மூலம் பன்றிகளின் தொல்லை குறைகிறது. ஆகையால் சோதனை முறையில் 4,000 ஏக்கர்களில் உள்ள கருவேல மரங்களை அகற்றவுள்ளோம்.
விவசாயிகளின் தானியங்களைப் பாதுகாக்க தார்பாய்கள் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் 43,000 விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. முன்பு 2 லட்சம் ஹெக்டேர் பரப்பளவாக இருந்த கரும்பு சாகுபடியின் பரப்பளவு தற்பொழுது 1.3 லட்சமாகக் குறைந்துள்ளது. இதனை அதிகப்படுத்த விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் கரும்பு ரகங்கள் வழங்க உள்ளோம். இன்று வெளியிடப்பட்டுள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
கலைஞர் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், கடந்த ஐந்து ஆண்டுகள் செயல்படுத்தப்பட்டது. ஐந்து ஆண்டுகள் முடிவுற்றதால் இத்திட்டத்திற்கு பதிலாக புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
'எல் நினோ'வால் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகவே எல் நினோ பாதிப்புகள் குறித்து மாவட்டம் வாரியாக 'District Agriculture Condition Plan'- ஐ தயார் செய்து, என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஹைதராபாத்தில் உள்ள 'Central Research Institute of Dryand Agricultural' உடன் ஆலோசனை நடத்தி என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. வரக்கூடிய நாட்களில் எல் நினோவின் தாக்கம் குறையலாம் என்று தெரிவிக்கிறார்கள். அவ்வாறு மழை கணிசமாக இருந்து காவிரியில் தண்ணீர் வரும் பட்சத்தில் எந்தவித பாதிப்பும் தமிழ்நாட்டில் இருக்காது.
விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது" என்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறைச் செயலாளர் சங்கர் கூறினார்.