📅 Sunday, 09 August 2026 IST | ஆடி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 09, 2026 11:33 AM

“பெண்களை யார் தவறாக பேசினாலும் நடவடிக்கை எடுப்போம்!”

“பெண்களை யார் தவறாக பேசினாலும் நடவடிக்கை எடுப்போம்!”

“பெண்களை யார் தவறாக பேசினாலும் நடவடிக்கை எடுப்போம்!”

அமைச்சர் நிர்மல் குமார் பொளேர்

படம்: ஏ.எஸ்.ஹர்ஷன் பரத்

“காவிரித் தண்ணீர் வராமல் டெல்டா காய்ந்து கிடப்பதைப் பற்றிக் கவலைப்படாமல், கைது நடவடிக்கைகளைக் காட்டி திசைதிருப்புகிறதா தமிழக அரசு?”

“திசைதிருப்ப வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அன்றைய தினம், பெண்களுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் பேசியது அநாகரிகத்தின் உச்சம். அது குறித்து வந்த புகாரின்பேரில்தான் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. யாராக இருந்தாலும் பொதுவெளியில் இப்படி அநாகரிகமாகப் பேசியதை எப்படி அனுமதிக்க முடியும்... அப்படி அனுமதித்தால், நாட்டில் பெண்களே நடமாட முடியாதபடி தினமும் மேடை போட்டு ஒவ்வொருவராகப் பேச ஆரம்பித்துவிடுவார்கள். எனவே, பெண்களுக்கு எதிராக யார் பேசினாலும் நடவடிக்கை எடுக்கத்தான் செய்வோம்.”

“வைகுண்டம் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக த.வெ.க எம்.எல்.ஏ-மீது புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லையே?”

“த.வெ.க-வைச் சேர்ந்தவர்கள் மீதே கூடப் புகார்கள் வந்து, அதற்கான ஆதாரங்களும் இருந்தால் அவர்கள்மீது சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது. வைகுண்டம் விவகாரத்திலும் அந்தப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், இரண்டு பேரை உடனடியாகக் கைதுசெய்துவிட்டோம். எம்.எல்.ஏ பெயரைக் குற்றவாளிகள் பயன்படுத்தியதாகப் புகாரில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்கான உரிய ஆதாரங்கள் இல்லை என்கிறபோது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்... புகார் கொடுத்திருக்கும் பெண்ணை, இதுவரை எம்.எல்.ஏ எங்கேயும் நேரில் சந்தித்ததுகூடக் கிடையாது. ஆக, யார் வேண்டுமானாலும், யார்மீதும் புகார் கொடுக்கலாம். நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில், ஆதாரங்கள் வேண்டும்.”

“கைது நடவடிக்கை என்ற பெயரில் சென்னையிலிருந்து உதயநிதியை தஞ்சைக்கு அழைத்துச் சென்று அலைக்கழித்ததோடு, எஃப்.ஐ.ஆரில் சம்பந்தமே இல்லாத பிரிவுகளையெல்லாம் சேர்த்திருக்கிறீர்களே?”

“அப்படியெல்லாம் செய்யவேண்டிய அவசியமே இல்லை. வழக்குக்குச் சம்பந்தம் இல்லாத விஷயங்களையெல்லாம் செய்திருந்தால், இப்போது அவையே புதிதாகப் பல்வேறு வழக்குகளைக் கொண்டுவந்து சேர்த்திருக்கும். சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு உட்பட்ட காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று வழக்கு பதியப்பட்டிருக்கிறது. விசாரணைக்குப் பிறகு அவரை விடுவித்ததும், சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளரின் முடிவுதான். மற்றபடி அலைக்கழிக்க வேண்டும் என்றால் அரசுக்குத் தெரியாதா... கடந்தகாலத்தில் தி.மு.க அரசு, ஜெயலலிதாவைக் கைதுசெய்தபோது, அவர் பயன்படுத்திவந்த செருப்புகளைக்கூட, புகைப்படங்களாக வெளியிட்டதெல்லாம்தான் அவசியமற்ற நடவடிக்கைகள்.”

“மதரீதியிலான மோதல் - கலவரத்தைத் தூண்டுவது உள்ளிட்ட பிரிவுகளையெல்லாம் சம்பந்தமே இல்லாமல் வழக்கில் கொண்டுவந்து சேர்த்திருப்பது உள்நோக்கம் கொண்ட நடவடிக்கைதானே?”

“இதையெல்லாம் வழக்கு பதிந்த காவல் ஆய்வாளரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்! ஏனெனில், பொதுமேடைகளில் இது போன்று அநாகரிகமாகப் பேசினால் என்னென்ன பிரிவுகளில் வழக்கு பதியலாம் என்பதையெல்லாம் ஆய்வாளரும் உதவி ஆய்வாளரும் கலந்து பேசித்தான் முடிவெடுப்பார்கள்.”

“ ‘நிதி நிலைமையைச் சீர்செய்ய இரண்டு வருட அவகாசம் தேவை’ எனத் தமிழக பட்ஜெட்டில் அறிவித்திருப்பதே, தேர்தலுக்கு முன்பு த.வெ.க அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்கிற ஒப்புதல் வாக்குமூலம்தானே?”

“தேர்தலுக்கு முன்பு த.வெ.க அளித்த ஒவ்வொரு வாக்குறுதியையும் செயல்படுத்தவேண்டிய அவசியமும் கட்டாயமும் எங்களுக்கு இருக்கிறது. தற்போது சமர்ப்பிக்கப்பட்டிருப்பது குறுகியகால பட்ஜெட்தான். அடுத்த 6 மாதங்களுக்குள் அடுத்த பட்ஜெட் வரும். இந்த நிலையில், இருக்கிற நிதி நிலைமையை வைத்துக்கொண்டு ஆசுவாசப்படுத்திக்கொள்வதோடு, அடுத்தடுத்து எதிர்வரும் மழை, புயல் பேரிடர்களை எதிர்கொள்ளவும் வேண்டியிருக்கிறது. எனவே, இப்போதைய சூழலில், எந்தெந்த வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்ற முடியுமோ, அவற்றை மட்டும் பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறோம். இனி வரும் காலகட்டத்தில், ஒவ்வொன்றாக அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்.”

“அப்படியென்றால், ‘அடுத்த ஐந்தாண்டுக் காலத்துக்குள் த.வெ.க அரசு 10 லட்சம் கோடி கடன் வாங்கிவிடும்’ என்ற முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவின் கருத்து உண்மையாகிவிடும்தானே?”

“அரசுக்கான வருவாயைக் கூட்டுவதற்கு கடந்தகால அரசுகள் எந்த முயற்சியையும் முன்னெடுக்கவில்லை. கடந்த 25 ஆண்டுகளாக, கடன் வாங்குவதை மட்டுமே வேலையாக வைத்திருந்திருந்தவர்கள் ஆவின், போக்குவரத்து, மின்வாரியம் எனத் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களையெல்லாம் நாசமாக்கிவிட்டார்கள். எனவே, பணியாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவை மோசமான நிலைமையில் இருக்கின்றன.

இந்த நிலையில், புதிதாக வந்திருக்கும் த.வெ.க அரசு, கமிஷனற்ற, ஊழலற்ற, லஞ்ச லாவண்யம் அற்ற அரசாக ஒவ்வொரு துறையையும் நெறிப்படுத்திவருவதோடு, புதிய வருவாயைப் பெருக்குவதற்கான வேலைகளையும் செய்து வருகிறோம். இது மிகக் கடுமையான, சவாலான காலகட்டம்தான். ஆனால், நிச்சயம் எல்லாவற்றையும் மீட்டெடுத்து ஒவ்வொரு ரூபாயையும் மக்களுக்கான திட்டங்களாகக் கொண்டுபோய் சேர்ப்பதில் முதல்வர் ஆர்வமாகச் செயல்பட்டுவருகிறார்.”