பிலிப்பீன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு: மூன்று மாணவர்கள் மரணம்
மணிலா: தென்பிலிப்பீன்சில் உள்ள ஓர் உயர்நிலைப் பள்ளியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது மூன்று மாணவர்கள் கொல்லப்பட்டனர், எட்டுப் பேர் காயமடைந்தனர்.
ஜூன் மாதத்திற்குப் பிறகு தென்பிலிப்பீன்ஸ் பள்ளி வளாகங்களில் நடந்திருக்கும் மூன்றாவது துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இது.
தெற்குத் தீவான மிண்டனாவோவின் தெற்கு கொட்டபாட்டோ மாகாணத்திலுள்ள பங்கா நகரத்தின் பங்கா தேசிய உயர்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) பிற்பகல் 1.30 மணியளவில் திடீரென்று துப்பாக்கிச்சூட்டு சத்தம் கேட்டதாக உள்ளூர் மீட்புக் குழுவினருக்குத் தகவல் கிடைத்தது.
அந்தச் சம்பவத்தில் 14 முதல் 17 வயதுக்குட்பட்ட மூன்று மாணவர்கள் உயிரிழந்ததாகவும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சொல்லப்படும் 16 வயது மாணவரும் அவர்களில் ஒருவர் என்றும் பங்கா நகர மேயர் ஆல்பர்ட் பலென்சியா தெரிவித்தார்.
“சந்தேகத்திற்குரிய அந்த மாணவன் தமது நண்பர்களுடன் உட்கார்ந்து கொண்டு, ‘மதிய உணவுக்குப் பிறகு நான் என் திட்டத்தைச் செயல்படுத்தப் போகிறேன், அதனால் நீங்கள் வீட்டிற்குச் செல்லுங்கள்’ என்று கூறியுள்ளான். அவன் எப்போதும் நகைச்சுவையாகப் பேசுபவன் என்பதால் நண்பர்கள் அதைப் பொருட்படுத்தாமல் சிரித்துக்கொண்டிருந்தனர்,” என்று திரு பலென்சியா ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
தாம் சொன்னபடி மதிய உணவிற்குப் பிறகு, சக மாணவர்களை நோக்கிச் சுடத் தொடங்கிய மாணவர் தம்மைத் தாமே சுட்டுக்கொள்வதற்கு முன் 10 மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அவர் மேலும் கூறினார்.
குறைந்த மதிப்பெண் பெற்ற விரக்தியில் மாணவர் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கலாம் என பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தம்மிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தெற்கு கொட்டபாட்டோ ஆளுநர் தமாயோவும் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
“துப்பாக்கிகளைப் பாதுகாப்பாக வைப்பதில் நாம் பொறுப்புடன் செயல்பட வேண்டும். குறிப்பாக, சிறார்களுக்கு அவை கிடைக்காதவாறு உறுதிசெய்ய வேண்டும்,” என்று அவர் கூறினார்.