📅 Friday, 07 August 2026 IST | ஆடி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 07, 2026 07:34 PM

பிரேமலதா: "முதலைமைச்சருக்கு தலைகுனிவு வந்தால் தமிழ்நாடு வெகுண்டெழும்"

பிரேமலதா: "முதலைமைச்சருக்கு தலைகுனிவு வந்தால் தமிழ்நாடு வெகுண்டெழும்"

தமிழக சட்டமன்றக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட பிரேமலதா, மேகதாது அணைக்கட்டு விவகாரம் குறித்து பேசும்போது, "தமிழ்நாடு முதலமைச்சருக்கு அவமானம் ஏற்பட்டால் ஒட்டுமொத்த தமிழகமும் வெகுண்டெழும்" என்றார்.

தனது விருத்தாசலம் தொகுதியை மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் தனது பேச்சைத் தொடங்கிய பிரேமலதா, தண்ணீர் பிரச்சினை குறித்து பேசும்போது கூறியதாவது:

"நாம் பிற மாநிலங்களிடம் இருந்து தண்ணீர் கேட்டுக்கொண்டிருக்கிறோம். நாம் தண்ணீரில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக இருக்க வேண்டும் என்றால், இப்போது பெய்துவரும் மழையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தன்னிறைவு என்பதுதான் முதல் நாளிலிருந்து என்னுடைய கோரிக்கை.

தடுப்பணைகள் கட்டி, தூர்வாரி, பெய்துவரும் மழைநீரைச் சேகரித்து, நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுத்து, தமிழ்நாட்டு மக்கள் தன்னிறைவு பெற்றவர்களாக இருக்கும் நிலையை அரசு உருவாக்க வேண்டும்."

மேலும் பேசிய அவர், "இன்று காலை முதலே உறுப்பினர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் எனப் பேசி வருகின்றனர். ஆனால், ஏற்கனவே இந்த அவையில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு எதற்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் என்பது ஆளும் கட்சியினரின் கேள்வியாக இருக்கிறது.

கேப்டன் அவர்கள் இங்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, ஒவ்வொரு மக்கள் பிரச்சினைக்கும் அனைவரையும் அழைத்துச் சென்று பிரதமரைச் சந்தித்திருக்கிறார். அதைப்போல இப்போதும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, தமிழகத்தின் பிரச்சினைகளான நீட், மேகதாது அணை, காவிரி நீர் போன்ற விவகாரங்களுக்காகக் கட்சி வேறுபாடுகள் இன்றி டெல்லியில் முறையிட வேண்டும்" என்றார்.

தொடர்ந்து, "எல் நினோவினாலும், தண்ணீர் இல்லாமலும் சம்பா, குறுவை பருவங்கள் முடிந்த பிறகும் பயிர் செய்ய முடியாமல் இருக்கும் விவசாயிகள் கடன் தள்ளுபடியை எதிர்பார்த்தனர். அரசு இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கர்நாடகாவில் இருந்து காவிரியில் தண்ணீர் வந்துவிட்டதாகப் பெருமைப்பட ஒன்றுமே இல்லை. உபரி நீரைத்தான் திறந்துவிட்டிருக்கிறார்கள். எனவே, இந்த விவகாரத்தில் அமைச்சர்களும் முதலமைச்சரும் வலிமையான முடிவை எடுக்க வேண்டும்

மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அப்படியானால், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் தமிழக மக்களும் உங்கள் பின்னால் இருப்போம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

முதலமைச்சர் அவர்கள் கர்நாடகா சென்று அவமானங்களைச் சந்திக்க நேரிடும் என சிந்தித்திருக்கிறார். உங்களை தமிழ்நாடு முதலமைச்சராக கர்நாடகாவுக்கு அனுப்பிவிட்டு, உங்களுக்கு ஒரு தலைகுனிவு வந்தால் தமிழ்நாடு பொறுத்திருக்குமா? ஒட்டுமொத்த தமிழ்நாடும் வெகுண்டெழும். நீங்கள் அதையெல்லாம் யோசிக்க வேண்டாம். நீங்கள் மக்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும் பேசினால் உங்களுக்கு எல்லோரும் துணை நிற்போம்.

முதலமைச்சர் அவர்கள் கர்நாடக முதலமைச்சரைச் சந்திக்க வேண்டும் என முதலில் நான் தான் கூறினேன். ஏனென்றால், இருவரும் முதன்முறையாக முதலமைச்சராக இருக்கிறார்கள். தமிழக மக்களுக்காக இருவரும் சந்தித்துப் பேசுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், அவர் இங்கு நிலைமை சரியில்லை எனக் கூறி, வர வேண்டாம் எனச் சொல்லிவிட்டார்.

"கர்நாடகாவில் நிலைமை சரியில்லை என்றால், தமிழ்நாட்டிற்கு கர்நாடக முதலமைச்சர் வந்து பேச வேண்டும். இரண்டு மாநில மக்களுக்குமாகத் தீர்வு காண வேண்டும்.

எனவே, முதலமைச்சர் கர்நாடக முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவெடுத்தால், அதற்கு தேமுதிக துணை நிற்கும்.

இயற்கை யாருக்கும் சொந்தமானது இல்லை. கர்நாடகாவின் உபரி நீர் நமக்கு வேண்டாம்; நம்முடைய உரிமையைப் பெறுவோம்" என்றார்.

இறுதியாக, கலகலப்பாகப் பேசத் தொடங்கிய அவர், "717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது குறித்து பேசினார்கள். என்னுடைய தொகுதியில்கூட அதை மூடவில்லை. நான் விருகம்பாக்கம் தொகுதி, சாலிகிராமத்தில் வசிக்கிறேன். முதலமைச்சர் அவர்களும் நீண்ட நாட்கள் அங்குதான் வசித்தார்.

அங்குள்ள ஜெயபால் கரோடியா பள்ளிக்கு அருகில் இருக்கக்கூடிய டாஸ்மாக் கடைகூட மூடப்படாமல் இருக்கிறது. இதை விருகம்பாக்கம் மக்கள், நாங்கள் அங்கு நீண்ட நாட்களாக வசிப்பதால், என்னிடம் வந்து முறையிட்டார்கள். அதை இங்கே உள்ள விருகம்பாக்கம் தொகுதி உறுப்பினருக்காகப் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன்.

இதையெல்லாம் செய்யவில்லை என்றால், ‘ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாது’ என்று சொல்லிவிடுவார்கள்.

இன்று தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ந்த பிறகும், சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் வருகைப் பதிவுக்கு கையெழுத்துப் போட்டுக்கொண்டிருக்கிறோம். நமக்கு பயோமெட்ரிக் சிஸ்டம் வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்."

"சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தண்ணீர் பாட்டில் வைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தேன். அதில் அண்ணன் ஓபிஎஸ் ஆட்சேபனை தெரிவித்துவிட்டார்.

சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் தேவைப்படும்போது சென்று ஓய்வெடுத்துக்கொள்கிறோம். ஆனால், இங்கு இருக்கக்கூடிய கேமராமேன்கள் ஐந்து பேரும் அதே இடத்தில் நின்றுகொண்டிருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கும் ஓய்வு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என தனது உரையை முடித்தார்.

அவர் உரையை முடித்த பிறகு, ஓபிஎஸ் தனது ஆட்சேபனையை வாபஸ் பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்