பனாமா கால்வாயின் நடுநிலை குறித்த அனைத்துலக ஒப்பந்தத்தில் இணையவுள்ள சிங்கப்பூர்
உலகில் மிகவும் சுறுசுறுப்பான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான பனாமா கால்வாயின் நிரந்தர நடுநிலைமையைக் கடைப்பிடிப்பதற்கும் மதித்து நடப்பதற்குமான அனைத்துலக ஒப்பந்தத்தில் சிங்கப்பூர் இணையவுள்ளது.
அத்துடன், எல்லை தாண்டிய குற்றங்களை மேலும் சிறப்பாய்க் கையாள்வதற்காகப் பனாமாவுடன் சட்ட உதவிக்கான இருதரப்பு ஒப்பந்தம் குறித்துப் பேச்சு நடத்தப்படும் என்றும் சிங்கப்பூரின் அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.
பனாமா அதிபர் ஹோசே ராவுல் மூலீனோ, திரு தர்மனின் அழைப்பை ஏற்று சிங்கப்பூருக்கு மேற்கொண்ட மூன்று நாள் வருகையின் முடிவில் அவர் அந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டார்.
அதிபர் தர்மனின் அழைப்பை ஏற்று, பனாமா அதிபர் அக்டோபர் 3 முதல் 5ஆம் தேதி வரை சிங்கப்பூருக்கு வருகை அளித்தார். பனாமாவின் தலைவர் ஒருவர் 10 ஆண்டுகளில் சிங்கப்பூருக்கு வந்திருப்பது இதுவே முதன்முறை.
வர்த்தக இடையூறுகள், கணிக்க முடியாத உலகளாவிய சூழலுக்கு இடையில், அனைத்துலகச் சட்டங்களை நிலைநிறுத்தும் நிறுவனங்களை வலுப்படுத்த சிறிய நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று திரு தர்மன் கூறினார். அதிபர் மூலீனோவுக்கும் அவரின் மனைவிக்கும் அளிக்கப்பட்ட அரசாங்க விருந்தில் அவர் பேசினார்.
கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தையும் அனைத்துலகச் சட்டத்தையும் நிலைநிறுத்துவதில் சிங்கப்பூரும் பனாமாவும் ஆழ்ந்த ஆர்வம் கொண்டிருப்பதாகத் திரு தர்மன் தெரிவித்தார். 1982ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் கடல்சார் சட்ட உடன்படிக்கையை அவர் குறிப்பிட்டுச் சொன்னார்.
அதனால்தான் பனாமா கால்வாயின் நிரந்தர நடுநிலைமை மற்றும் செயல்பாடுகள் தொடர்பான உடன்படிக்கையின் நெறிமுறையை ஏற்க சிங்கப்பூர் முடிவுசெய்துள்ளது என்றார் அதிபர் தர்மன்.
அதன்படி, அமைதி மற்றும் போர்க் காலங்களில் அனைத்து நாடுகளின் கப்பல்களும் அமைதியான முறையில் செல்வதற்கு அந்த நீர்வழி திறந்திருக்கும். அந்த நீர்வழியை முன்பு கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமெரிக்காவுக்கும் பனாமாவுக்கும் இடையே 1977ல் இந்த உடன்படிக்கை கையெழுத்தானது. பனாமா கால்வாய், பனாமா வழியாகப் பசிபிக், அட்லாண்டிக் பெருங்கடல்களை இணைக்கிறது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
இந்த உடன்படிக்கையில் பிரான்ஸ், ஜெர்மனி, கொரியா, ரஷ்யா, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, பிலிப்பீன்ஸ், வியட்னாம் உள்ளிட்ட 41 நாடுகள் இணைந்துள்ளன.
முன்னதாக, வெளியுறவு அமைச்சில் திரு மூலீனோ, அதிபர் தர்மனையும் பிரதமர் லாரன்ஸ் வோங்கையும் சந்தித்துப் பேசினார்.
திரு வோங்கும் பனாமா அதிபரும் வட்டார, அனைத்துலக விவகாரங்கள் குறித்தும் வர்த்தகம், முதலீடு, தளவாடம், தொடர்பு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் விவாதித்தனர்.
சேட்ஸ் நிறுவனத்திற்கும் டோக்யுமென் அனைத்துலக விமான நிலையத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தலைவர்கள் இருவரும் நேரில் பார்வையிட்டனர்.
திரு மூலீனோ தேசிய ஆர்க்கிட் தோட்டத்திற்கும் சென்றிருந்தார். அங்குப் பனாமா அதிபர் மற்றும் அவருடைய மனைவியின் பெயர் ஆர்க்கிட் மலருக்குச் சூட்டப்பட்டது.