📅 Wednesday, 26 August 2026 IST | ஆவணி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 25, 2026 08:04 PM

`போலீஸாக ஆசைப்பட்ட எனக்கு யூனிபார்ம் வேல்யூ தெரியும்; ஒருவித கோபத்தில்.!'

`போலீஸாக ஆசைப்பட்ட எனக்கு யூனிபார்ம் வேல்யூ தெரியும்; ஒருவித கோபத்தில்.!'

`போலீஸாக ஆசைப்பட்ட எனக்கு யூனிபார்ம் வேல்யூ தெரியும்; ஒருவித கோபத்தில்.!'- அன்று போலீஸை அடித்த ஆகாஷ்

ஆர்மி ட்ரெயினிங் ஏரியாவில் என்சிசியில் இருந்தப்ப இரண்டு நாள் டிரெயினிங்கில் இருந்திருக்கேன். போலீஸ் யூனிபார்மோட வேல்யூ எனக்கு தெரியும். திட்டமிட்டு எதுவும் நடக்கவில்லை, நடந்த சம்பவத்துக்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்- ஆகாஷ்

தஞ்சாவூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட ஃப்ளக்ஸ் மாநகராட்சி சார்பில் அகற்றப்பட்டது. இதில் விசிக-வினர் வைத்த ஃப்ளக்ஸ் அகற்றப்பட்டதால் அக்கட்சியினர் மாநகராட்சி அலுவலகம் எதிரே திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அந்த இடத்தை கடக்க முயன்ற ஆகாஷ் என்ற இளைஞரை விசிக-வினர் தடுத்தனர். இதில் விசிக-வினருக்கும், ஆகாஷ்க்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

இதையடுத்து அங்கிருந்த போலீஸார் ஆகாஷிடம் பேசியுள்ளனர். அப்போது, `நான் என்ன தப்பு செய்தேன் என்னை பேசுகிறீர்கள்?' என்றுள்ளார் ஆகாஷ். இதில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்ரஹீம், ஆகாஷை அறைந்து விடுகிறார். பதிலுக்கு ஆகாஷும் அப்துல்ரஹீமை அடித்து விட்டார்.

கடந்த 17ம் தேதி நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சமூக ஊடகங்களில் இதன் காட்சிகளும் வேகமாக பரவியது. இந்நிலையில், ஆகாஷ் மற்றும் அவருக்கு ஆதரவாக பேசிய அய்யப்பன் இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்கள் மீது பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல், கலவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பொது ஊழியரை தாக்குதல், பொது ஊழியர் தனது பொதுப்பணியைச் செய்ய இடையூறு செய்தல், மிரட்டுதல், அரசு ஊழியர் தனது கடமையைச் செய்யும்போது தாக்குதல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

பெரும் பேசு பொருளான இந்த விவகாரத்தில் பலரும் ஆகாஷ்க்கு ஆதரவான பதிவுகளை பதிவிட்டனர். அதே நேரத்தில் விமர்சனங்களும் எழுந்தன. இதையடுத்து கைது செய்யப்பட்ட மறுநாளே ஆகாஷ் பிணையில் வெளியே வந்தார். அவருக்கு உடல் ரீதியாக பிரச்னை இருப்பதால் உடனே பிணை பெறப்பட்டதாக சொல்கிறார்கள்.

இந்த விவகாரம் இப்போதும் அடங்காமல் முணுமுணுக்கப்படுகிறது. இந்த சுழலில் தஞ்சாவூர், விளார் பகுதியில் உள்ள வீட்டில் ஆகாஷை சந்தித்து பேசினோம்,

``நான் பத்தாம் வகுப்பில் 424 மார்க் எடுத்தேன், மேக்ஸில் 98 மார்க்கு எடுத்து ஸ்கூல் டாப்பராக வந்தேன். பி.எஸ்.சி மேக்ஸ் படித்திருக்கிறேன். ராணுவ வீரர் அல்லது போலீஸ் ஆக வேண்டும் என்பது தான் என் கனவு. அதற்காகவே பள்ளி, கல்லூரிகளில் என்சிசியில் சேர்ந்தேன்.

கல்லூரியில் படித்தபோது விபத்தில் சிக்கியதில் தலையில் பலமாக அடிப்பட்டது. அதன் பிறகு எனக்கு பிக்ஸ் வரும் இதற்காக ரெகுலராக மாத்திரை எடுத்து வருகிறேன். அதன் பிறகு ராணுவ வீரர் ஆக வேண்டும் என்ற என்னோட கனவு பொசுங்கியது. போலீஸும் ஆகமுடியவில்லை. ஜிம்மில் டிரெயினர் ஆனேன். தஞ்சாவூரில் இருந்த எஸ்.பி சார் ஒருவருக்கு டிரெயினராக இருந்திருக்கிறேன். என்சிசியில் இருந்ததால் கொரோனா லக்டெளன் சமயத்தில் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து விழிப்புணர்வு செய்தேன்.

காதல் திருமணம்

இதனால் கடன் சுமை என் தலையில் விழுந்தது. குடும்பத்தை காக்கவும், கடனை அடைக்கவும் பகலில் ஜிம் ட்ரெயினராகவும், இரவில் சிக்கன் பண்ணையிலும் வேலை செய்தேன்.

சரியா தூங்கலைன்னா எனக்கு பிக்ஸ் வந்திடும். ஆனாலும் பணத்தேவை இருக்குதேனு எந்நேரமும் ஓடினேன். அப்பா வகையில் எங்களுக்கு பல பிரச்னைகள் இருக்கு. அம்மாவுக்கு 61 வயது ஆகுது. இப்ப வரைக்கும் ஆதார் உள்ளிட்ட எந்த ப்ரூப்பும் கிடையாது. அம்மாவுக்கு ஆதார் எடுப்பதற்காக கிடைச்ச நேரத்தில் அலைஞ்சேன். இதற்காக தாலுக்கா ஆபீஸ் போனப்பதான் இந்த சம்பவம் நடந்தது. போராட்டம் நடத்தியவர்களில் சிலர் என்னையும், என் குடும்பத்தையும் தகாத வார்த்தைகளில் பேசினர். அப்பகூட நான் எந்த பேட் வேட்ஸும் யூஸ் பண்ணல ஆனால் டிரிக்கர் ஆகிட்டேன். அமைதிப்படுத்த வந்த போலீஸ் ஒருவர் எடுத்ததுமே வண்டிய ஸ்டேஷனுக்கு விடுனுன்னார். நான் என்ன சார் தப்பு செஞ்சேன், போராட்டம் நடத்தியவர்களை பேசாமல் என்னை பேசுறீங்க, பலர் டூவீலரில் கடந்து போனாங்க அதனால் நானும் வந்தேனு சொன்னேன்.

அனைவருக்கும் என் நன்றிகள்!

அதன் பிறகு அப்துல்ரஹீம் சார் வந்தார். அப்பதான் ஏதோ கோபத்தில் அந்த சம்பவம் நடந்து விட்டது. அதன் பிறகு ஸ்டேஷனுக்குள் நடந்தவை என்னோடு போகட்டும். அந்த சூழலிலும் என் நிலையை உணர்ந்து விஷ்ணு பிரசாத் எஸ்.ஐ சார் உள்ளிட்ட போலீஸார் ரொம்பவே பரிவு காட்டி பாதுகாப்பாக இருந்தனர். என்சிசியில் இருந்தபோது ஆர்மி ட்ரெயினிங் ஏரியாவில் இரண்டு நாள் டிரெயினிங்கில் இருந்திருக்கேன். போலீஸாக ஆசைப்பட்ட எனக்கு போலீஸ் யூனிபார்மோட வேல்யூ தெரியும். நடந்த சம்பவத்துக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த விவகாரகத்தில் எனக்கு துணை நின்ற மீடியா மற்றும் சமூக ஊடகத்தினர், அரசியல் கட்சியினர் அனைவருக்கும் என் நன்றிகள்.

18ம் தேதி எனக்கு பிறந்தநாள் ஆனால் சரியாக இரவு 12.05 மணிக்கு எனக்கு சிறைக்கதவு திறந்தது. நடந்த எல்லா வலிகளையும் மறந்து, கடந்து வாழ வேண்டும். நான் வேலைக்கு போய் ஒருவாரம் ஆகி விட்டது. சிக்கன் கம்பெனியில் என்னை வேலையை விட்டு எடுத்து விட்டனர். என்னை நம்பி வந்தவளை காக்க வேண்டும், பொருளாதாரத்திற்காக வேலைக்கு செல்ல வேண்டும், எனக்கு மருத்து, மாத்திரை வாங்க வேண்டும், காதல் திருமண செய்ததற்கான எதிர்ப்பை சமாளிக்க வேண்டும். இப்படி பல சிக்கல்களை நான் கடக்க வேண்டும். நான் செஞ்சதுக்கு அப்துல்ரஹீம் சார்கிட்ட மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டேன், அவரும் ஏத்துக்கிட்டு ஸாரி சொன்னார்.

ஒரு வித கோபத்தில் எல்லாம் நடந்து முடிந்து விட்டது!

எனக்கு குடும்பத்தோடு நல்லா வாழணும், என் மகளை ஆளாக்கணும். என் மீதும், எனக்கு சப்போர்ட் செய்த காரணத்திற்காக அய்யப்பன் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். திட்டமிட்டு எதுவும் நடக்கவில்லை, ஒரு வித கோபத்தில் எல்லாம் நடந்து முடிந்து விட்டது. இனி நடப்பவை நல்லவையாக அமையணும். என் வாழ்க்கை நல்லபடியா அமையவும், என் குடும்பத்தினருக்காகவும் தமிழக முதல்வர் விஜய் சார் இதில் தலையிட்டு என் மீதுள்ள வழக்கை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நடந்தவைக்கு மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.