📅 Friday, 11 September 2026 IST | ஆவணி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 11, 2026 05:42 PM

‘ஃபோர்ப்ஸ்’ ஊடகத்தின் உலகளாவிய சிறந்த வங்கி பட்டியலில் ஓசிபிசி முதலிடம்

‘ஃபோர்ப்ஸ்’ ஊடகத்தின் உலகளாவிய சிறந்த வங்கி பட்டியலில் ஓசிபிசி முதலிடம்

‘உலகில் சிறந்த முறையில் இயங்கும் வங்கிகள்’ பட்டியலில் சிங்கப்பூரின் ஓசிபிசி வங்கியும் டிபிஎஸ் வங்கியும் முதல் இரு இடங்களில் வந்தன.

அனைத்துலக அளவில் ஊடக, வர்த்தக, விளம்பர, தொழில்நுட்ப நிறுவனமான ஃபோர்ப்ஸ், அதன் பொருளியல், நிதி சார்ந்த அறிக்கைகளுக்கும் பல துறைகளின் தரப் பட்டியல்களுக்கும் புகழ்பெற்ற அமைப்பாகும். அது வழங்கும் தரவரிசைகள் பலரால் ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் அமைந்துள்ளது.

முதன்முறையாக அந்த அமைப்பும் ‘ஸ்டட்டிஸ்டா’ என்ற சந்தைத் தரவு ஆய்வு நிறுவனமும் இணைந்து வெளியிட்ட சிறந்த வங்கிகள் பட்டியலில் 89 நாடுகளில் செயல்படும் 500 வங்கிகள் ஆறு நிலைகளில் வரிசைப் படுத்தப்பட்டன.

வங்கிகள் தயாரித்து வெளியிடும் தரவுகள், இணையத்தில் செயல்படும் எஸ்&பி அமைப்பின் தரவுத் தளங்கள், பொது ஆய்வுகள் போன்றவற்றில் எடுக்கப்பட்ட விவரங்களைக்கொண்டு வங்கிகளின் நிதியியல் நிலைப்பாடு மதிப்பிடப்பட்டது என்று ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) விளக்கமளித்தது.

பட்டியலில் இடம்பெற வைப்புத் தொகைக்கான உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள் சில்லறை, நிறுவன நிலை வாடிக்கையாளர்களைக் கொண்ட அடிப்படை வர்த்தகத்தை செய்துகொண்டிருக்க வேண்டும். மேலும் பல தகுதிகள் உட்பட அந்நிறுவனங்களுக்குக் கடன் வழங்கும் சேவையுடன் S$3.8 பில்லியன் (US$3 பில்லியன்) மதிப்புள்ள சொத்துகள் இருக்கவேண்டியதும் அவசியம்.

வங்கிகள் ஈட்டும் லாபம் (30%), அவற்றின் வளர்ச்சியும் வருவாய் தரமும் (20%), அவை செய்துள்ள மூலதனமும் நிதி வழங்குவதில் மீள்திறனும் (25%), வைத்துள்ள சொத்துகளின் தரநிலையும் சேவைத் திறனும் (25%) ஆகிய தன்மைகள் குறிப்பிடப்பட்ட விழுக்காட்டின் அடிப்படையில் பட்டியல் தயாரிப்பாளர்களால் மதிப்பிடப்பட்டன.