📅 Friday, 28 August 2026 IST | ஆவணி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 28, 2026 11:04 AM

பரந்தூரில் நிலம் இருப்பதை நிரூபித்தால்.. நிலம்+ 50% பங்கு இலவசம்! G Square நிறுவனரின் அதிரடி சவால்!

பரந்தூரில் நிலம் இருப்பதை நிரூபித்தால்.. நிலம்+ 50% பங்கு இலவசம்! G Square நிறுவனரின் அதிரடி சவால்!

பரந்தூரில் நிலம் இருப்பதை நிரூபித்தால்.. நிலம்+ 50% பங்கு இலவசம்! G Square நிறுவனரின் அதிரடி சவால்!

பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்பட்டதை திமுக கடுமையாக எதிர்த்து, சென்னையின் வளர்ச்சி தடைப்படும் என குற்றம்சாட்ட, தவெக ஆதரவாளர்கள் ஜி ஸ்கொயர் நிலம் வாங்கியதால்தான் திமுக எதிர்ப்பு என சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்தனர். இதனால் சர்ச்சை தீவிரமடைந்த நிலையில், நிறுவனர் பால ராமஜெயம், பரந்தூரில் தமக்கோ அல்லது உறவினர்களுக்கோ நிலம் இருப்பதை நிரூபித்தால் அந்த நிலத்தையும், நிறுவனத்தின் 50% பங்கையும் இலவசமாக தருவேன் என ஊடக முன்னிலையில் சவால் விடுத்து, குற்றச்சாட்டுகளை நேரடியாக எதிர்கொண்டுள்ளார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் சில ஆண்டுகளில் அதிக நெருக்கடியை சந்திக்கும் என்பதால் சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இதற்காக பல்வேறு இடங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது.

தொடர்ந்து பரந்தூரில் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. அரசின் இந்த முயற்சிகளுக்கு அந்த பகுதியை சேர்ந்த மக்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்ததால் இந்த பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் விமான நிலையத்துக்கு நிலத்தை கையகப்படுத்துவதை எதிர்த்து பரந்தூர் பகுதியில் அமைந்துள்ள ஏகனாபுரத்தில் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்துக்கு தவெக தலைவர் விஜயும் நேரில் சென்று ஆதரவு அளித்திருந்தார்.

தொடர்ந்து தவெக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், சட்டப்பேரவையில் பரந்தூர் விமான நிலையதிட்டத்தை கைவிடுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இதனால் சென்னையின் வளர்ச்சியே பாதிக்கப்படும் என்றும் கடும் விமர்சனத்தை முன்வைத்தது. இதனைத் தொடர்ந்து தவெக ஆதரவாளர்கள் திமுகவுக்கு ஜி ஸ்கொயர் நிறுவனம் பரந்தூர் பகுதியில் நிலம் வாங்கியுள்ளதாகவும், அதனால்தான் பரந்தூர் விமான நிலையதிட்டத்தை கைவிடுவதற்கு திமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது என்றும் சமூக வலைத்தளங்களில் விமர்சனத்தை முன்வைத்தனர். சட்டமன்றத்திலும் இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் பேசியபோது, “ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை” என பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான பால ராமஜெயம் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கடந்த சில நாட்களாக சட்டமன்றத்தில் எங்கள் நிறுவனத்தை பற்றிய பேச்சுகள் வருகின்றன என்றும், எனக்கும் சபரீசனுக்கும் தொடர்பு இருக்கிறது என நிரூபித்தால் அவர்களுக்கு நான் நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை கொடுக்கிறேன் என்றும் கூறியுள்ளார். மேலும், பரந்தூரில் எனக்கோ, எனது பிள்ளைகளுக்கோ எனது உறவினருக்கோ ஒரு சென்ட் நிலம் கூட கிடையாது. அப்படி இருக்கிறது என நீங்கள் நிரூபித்தால் அந்த நிலத்தை உங்களுக்கு இலவசமாக தருகிறேன் என்றும், என்னுடைய நிலத்தில் மலை ஏதும் கிடையாது. அப்படி இருந்தால் அந்த இடத்தை நான் பத்திரிகையாளர்களுக்கு கொடுத்து விடுகிறேன். என் மீதான குற்றச்சாட்டுகளை நீங்கள் நிரூபித்துவிட்டால், ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நீங்கள் மாறிவிடுங்கள் என்றும் சவால் விடுத்துள்ளார்.