📅 Monday, 14 September 2026 IST | ஆவணி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health September 14, 2026 12:41 PM

புற்றுநோய் எதிர்ப்பு: என்யுஎஸ் காந்தத் துடிப்பு சிகிச்சை

புற்றுநோய் எதிர்ப்பு: என்யுஎஸ் காந்தத் துடிப்பு சிகிச்சை

இடைவெளிவிட்டுச் செலுத்தப்படும் குறைந்த அளவிலான காந்தத் துடிப்புகள், வழக்கமாகப் புற்றுநோய் வளர்ச்சியை ஊக்குவிக்கும் கெட்ட நோய் எதிர்ப்பு அணுக்களை, புற்றுநோய் அணுக்களைத் தாக்கி அழிக்கும் அணுக்களாக மாற்றக்கூடும் என்பதை சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக (என்யுஎஸ்) ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கீமோதெரபி சிகிச்சையைப் பயன்படுத்தாமல், மார்பகப் புற்றுநோயைக் குறிவைத்து குணப்படுத்தும் சிகிச்சைக்கு அந்த முறையை விஞ்ஞானிகள் வெற்றிகரமாகப் பயன்படுத்தியுள்ளனர்.

அந்த மின்காந்தச் சிகிச்சைமுறை, வெறும் 30 நிமிடங்கள் நீடித்த நான்கு சிகிச்சை அமர்வுகளுக்குப் பிறகு, 75 விழுக்காட்டு மருத்துவச் சோதனைகளில் புற்றுநோய்க் கட்டிகளை முற்றிலும் அழித்தது.

மின்காந்தச் சிகிச்சைமுறை என்பது, வெப்பத்தையோ திசுக்களுக்குச் சேதத்தையோ ஏற்படுத்தாமல் உடலுக்குள் பாதுகாப்பாக ஊடுருவக்கூடிய லேசான, குறைந்த ஆற்றல் கொண்ட காந்தத் துடிப்புகளைப் பயன்படுத்துவதாகும்.

அந்த ஆராய்ச்சியை என்யுஎஸ் சுகாதாரப் புத்தாக்க, தொழில்நுட்பக் கழகத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் அல்ஃப்ரெடோ ஃபிரான்கோ-ஓப்ரிகோன் வழிநடத்தினார்.

அந்தத் துடிப்புகள் உடலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக அணுக்களைச் சீரமைக்கும் கருவி போல செயல்படுவதாக அவர் கூறினார்.

சிங்கப்பூரில், மார்பகப் புற்றுநோய் பெண்களிடையே மிகவும் பரவலாகக் காணப்படுகிறது. பெண்களிடையே கண்டறியப்படும் மொத்தப் புற்றுநோய்களில் கிட்டத்தட்ட 30 விழுக்காடு மார்பகப் புற்றுநோயாக உள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டின் சிங்கப்பூர்ப் புற்றுநோய்ப் பதிவேட்டின் ஆண்டறிக்கைபடி, தங்கள் வாழ்நாளில் 12 பெண்களில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

இருப்பினும், மருந்துகளுக்குக் கட்டுப்படாமல் இருப்பது, சிகிச்சையால் ஏற்படும் நச்சுத்தன்மை, கட்டிகளின் வேறுபட்ட தன்மை, அதாவது புற்றுநோய் அணுக்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இல்லாமல் இருக்கும் நிலை போன்ற சவால்களை மார்பகப் புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்கள் எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது.