📅 Sunday, 09 August 2026 IST | ஆடி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 08, 2026 05:33 PM

புவனேஷ்வர் குமார் 2027 உலகக்கோப்பை ஆடுவதில் உள்ள பிரச்சனையே இதுதான்.. உண்மையை உடைத்த ஆகாஷ் சோப்ரா

புவனேஷ்வர் குமார் 2027 உலகக்கோப்பை ஆடுவதில் உள்ள பிரச்சனையே இதுதான்.. உண்மையை உடைத்த ஆகாஷ் சோப்ரா

புவனேஷ்வர் குமார் 2027 உலகக்கோப்பை ஆடுவதில் உள்ள பிரச்சனையே இதுதான்.. உண்மையை உடைத்த ஆகாஷ் சோப்ரா

மும்பை: 2027 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா, நமிபியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில், மூத்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. 2025 ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் 17 விக்கெட்டுகளையும், 2026 ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் 28 விக்கெட்டுகளையும் வீழ்த்தி புவனேஷ்வர் குமார் அசத்தலான ஃபார்மில் உள்ளார்.

தற்போது 36 வயதாகும் புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சு நாளுக்கு நாள் மெருகேறி வரும் நிலையில், அவரது உலகக்கோப்பை வாய்ப்பு குறித்து முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளார். புவனேஷ்வர் குமாருக்கு வயது ஒரு தடையாக இருக்காது என்றும், ஆனால் ஒருநாள் போட்டிகளுக்கான பணிச்சுமை தான் அவருக்குப் பெரிய பின்னடைவாக இருக்கும் என்றும் ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த இரு ஆண்டுகளாக புவனேஸ்வர் குமார் ரஞ்சி டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை. அதே போல உள்நாட்டு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவில்லை. உள்நாட்டு டி20 தொடர்களில் மட்டுமே அவர் விளையாடி வருகிறார். ஐபிஎல் மட்டுமே அவர் பங்கேற்கும் பெரிய தொடராக உள்ளது.

தனது யூடியூப் சேனலில் இதுகுறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, "புவனேஷ்வர் குமார் மீண்டும் இந்திய அணிக்கு ஆட வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். ஆனால் அவர் ரஞ்சி கோப்பை போன்ற உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடாத போது அவரது பணிச்சுமை மிகவும் குறைந்து விடுகிறது. ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 10 ஓவர்கள் பந்துவீசி, 50 ஓவர்கள் ஃபீல்டிங் செய்ய வேண்டும். இதற்கு அதிக உடல்தகுதி மற்றும் தொடர் பயிற்சி தேவைப்படும்" என்றார்.

மேலும், "கடந்த 2022 நவம்பர் மாதத்திற்குப் பிறகு அவர் இந்திய அணிக்காக விளையாடவில்லை. ஐபிஎல் தொடரில் 4 ஓவர்கள் மட்டுமே பந்துவீசுவதை வைத்து நேரடியாக 50 ஓவர் உலகக்கோப்பைக்குத் தேர்வு செய்வது தவறான முடிவாக அமையும். அவரை உலகக்கோப்பையில் சேர்க்க வேண்டுமென்றால், குறைந்தது ஓராண்டுக்கு முன்பிருந்தே அனைத்து ஒருநாள் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாட வைக்க வேண்டும்" என்று கூறினார் ஆகாஷ் சோப்ரா.