பழநி நில மோசடி வழக்கில் கைதான சார்பதிவாளருக்கு உடல் நலக்குறைவு: மருத்துவமனைக்கு சென்று ரிமாண்ட் செய்த மாஜிஸ்திரேட்
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை ரிமாண்ட் செய்த மாஜிஸ்திரேட் பாக்கியராஜ் (வலது).
திண்டுக்கல்: பழநி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மாஜிஸ்திரேட் பாக்கியராஜ் ரிமாண்ட் செய்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவார பகுதியில் உள்ள தண்டபாணி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மோசடியாக ரூ.2 கோடிக்கு பத்திரப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக திண்டுக்கல் சிபிசிஐடி போலீஸார், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மடத்து நிர்வாகி முருகதாஸ், நிலத்தை வாங்கிய திருப்பூர் மாவட்டம் பாப்பன்குளத்தை சேர்ந்த வெள்ளத்துரை, பழநி அருகே புதூரைச் சேர்ந்த சேதுபதி, பத்திரம் தயாரித்து கொடுத்த வழக்கறிஞர் அன்வர்தீன், இடைத்தரகராக செயல்பட்ட ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் உட்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.
இந்த வழக்கில் முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி, அன்வர்தீன் ஆகிய நால்வரையும் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் பெற்று திண்டுக்கல் சிபிசிஐடி போலீஸ் அலுவலகத்தில் கடந்த வாரம் முழுவதும் விசாரணைக்கு ஆஜராகி வந்தார். இந்நிலையில் இவரது ஜாமீனை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது.
இதையடுத்து ஜஸ்டின் மணிகண்டன் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்பதால் கொடைக்கானலில் தலைமறைவானார். தகவலறிந்த சிபிசிஐடி போலீஸார் கொடைக்கானல் சென்று ஜஸ்டின் மணிகண்டனை கைது செய்து அழைத்து வந்தனர். திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து அவரிடம் நேற்று முன்தினம் விசாரணை மேற்கொண்டனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்னதாக மருத்துவ பரிசோதனைக்கு திண்டுக்கல்லில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பது தெரியவந்தது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதனால் ஜஸ்டின் மணிகண்டனை நீதிமன்றத்திற்கு நேரில் அழைத்து வர முடியாத சூழ்நிலை உள்ளதாக திண்டுக்கல் மாஜிஸ்திரேட் பாக்கியராஜுக்கு சிபிசிஐடி போலீஸார் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து மாஜிஸ்திரேட் பாக்கியராஜ் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வரும் ஜஸ்டின் மணிகண்டனை நேரில் பார்த்து விசாரணை நடத்தி ரிமாண்ட் செய்தார். ஆகஸ்ட் 21-ம் தேதி வரை இவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் ஜஸ்டின் மணிகண்டன் தொடர்ந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.