📅 Thursday, 03 September 2026 IST | ஆவணி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 03, 2026 11:04 AM

ரேஷன் கடைகளில் வெங்காயம் வினியோகம்; 10 டன் இறக்குமதி

ரேஷன் கடைகளில் வெங்காயம் வினியோகம்; 10 டன் இறக்குமதி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், 118 ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்ய, 10 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

அண்டை மாநிலங்களில் நிலவும் மாறுபட்ட காலநிலை காரணமாக வெங்காயம் வரத்து குறைவாக உள்ளது. இதனால், வெளிச்சந்தையில் வெங்காயம் விலை 55 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலை அதிகரிப்பால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு விலை ஏற்றத்தை உடனடியாகக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு வெங்காயத்தை கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய திட்டம் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலம் முதற்கட்டமாக தமிழகத்திற்கு 1,000 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, பொதுமக்களுக்கு ஒரு கிலோ, 35 ரூபாய்க்கு வினியோகிக்க அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, விழுப்புரம் மாவட்டத்திற்கு லாரிகள் மூலம், 10 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த வெங்காயம் மூட்டைகள் மாவட்டத்தில் உள்ள, 118 ரேஷன் கடைகளுக்கு கடைக்கு ஏற்றார்போல் மாவட்ட நுகர்வோர் பண்டக சாலை மூலம் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, இன்று காலை ரேஷன் கடைகளில் ஒரு அட்டைக்கு ஒரு கிலோ வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.