Sigma Day 4 Box Office
சென்னை: விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் திரைப்படம் சிக்மா. இதில் சந்தீப் கிஷன் ஹீரோவாகவும், ஃபரியா அப்துல்லா ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்கள். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான படம்; கடந்த இரண்டாம் தேதி தியேட்டர்களில் வெளியானது. இந்நிலையில் அதன் வசூல் குறித்த விவரங்கள் வெளியாகியிருக்கின்றன.
விஜய் வழியில் அவரது மகன் ஹீரோவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவரோ தன் தாத்தா வழியில் இயக்குநராகியிருக்கிறார். இயக்குநராக அவர் அறிமுகமாவதாக அறிவிப்பு வந்ததிலிருந்தே; அவரையும் பெரிய இடத்துக்கு கொண்டு சென்று அமர வைத்துவிட வேண்டும் என்று முடிவு எடுத்திருந்தார்கள் விஜய்யின் ரசிகர்கள். சரியாக, சினிமாவிலிருந்து விஜய் விலகிய நேரத்தில் ஜேசனின் என்ட்ரி நடந்ததால்; ரசிகர்கள் ரொம்பவே எமோஷனாக கனெக்ட் செய்துகொண்டார்கள்.
சிக்மா திரைப்படம்: எப்படியோ சிக்மா படத்தின் பணிகளை எல்லாம் முடித்துவிட்டு ரிலீஸ் வரை கொண்டுவந்துவிட்டார் ஜேசன்.கடந்த இரண்டாம் தேதி பெரிய ஹைப்போடு தியேட்டர்களில் ரிலீஸானது படம். ரசிகர்களும் ஆர்வத்தோடும், மகிழ்ச்சியோடும் சென்று படம் பார்த்தார்கள். முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்கு ஜேசனின் தாய் சங்கீதாவும், தங்கை திவ்யா சாஷாவும் சென்னை கமலா தியேட்டருக்கு சென்றது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு உற்சாக வரவேற்பு கிடைத்தது.
எப்படி இருந்தது படம்?: மேக்கிங்கில் ஒரு இயக்குநராக ஜேசன் தப்பித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் கதை, திரைக்கதையில் இன்னமும் அவர் உழைப்பை போட்டிருக்கலாமோ என்றே தோன்றுகிறது. முதல் பாதியில்கூட கொஞ்சம் கொஞ்சம் திரைக்கதை தேறும்படி இருந்தது. ஆனால் இரண்டாவது பாதியில் எல்லாம் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. அடுத்தது என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்கும்படிதான் அவரது திரைக்கதை இருந்ததாக ரசிகர்கள் வேதனைப்பட்டார்கள்.
அவ்வளவு ஒன்றும் மோசமில்லை: அதேசமயம் அவர்கள் தங்கள் தளபதியின் மகன் படத்தை விட்டும் கொடுக்க மறுக்கிறார்கள். அதாவது அவ்வளவு ஒன்றும் அவர் மோசமாக எடுக்கவில்லை; முதல் படம் என்பதால்தான் இந்த தடுமாற்றம். கண்டிப்பாக அடுத்த படத்தில் தரமான சம்பவத்தை செய்வார் பாருங்கள் என்று உறுதியாக சொல்ல தொடங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் சிக்மா படத்தின் வசூல் குறித்த விவரத்தை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது.
சிக்மா வசூல் நிலவரம்: அந்த இணையதளம் வெளியிட்டிருக்கும் தரவுகள்படி, நான்காவது நாளான நேற்று வெறும் 84 லட்சம் ரூபாயை மட்டுமே வசூலித்திருக்கிறதாம். இதற்கு முந்தைய நாட்கள் வசூலைவிடவும் இது குறைவுதான். மொத்தம் நான்கு நாட்களில் அந்தப் படம் ஆறு கோடியே 19 லட்சம் ரூபாயை மட்டும்தான் வசூலித்திருக்கிறதாம். ஆகமொத்தம் விமர்சன ரீதியாகவும் சரி, வசூல் ரீதியாகவும் சரி ஜேசன் எதிர்பார்த்த வெற்றியை இந்தப் படம் கொடுக்கவில்லை என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.