தாய்மாமன் தங்க மோதிரம் டெண்டரை பெற்ற ஜாய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸ்
சென்னை: தமிழக அரசின், 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தில், தங்க மோதிரம் செய்யும் பணி, 70 சதவீதம் 'ஜாய் ஆலுக்காஸ்' நிறுவனத்திற்கும், 30 சதவீதம் 'கல்யாண் ஜுவல்லர்ஸ்' நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.
'அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு, 1 கிராம் தங்க மோதிரம் இலவசமாக வழங்கப்படும்' என, முதல்வர் விஜய் அறிவித்தார். அதன்படி, தமிழக மருத்துவ சேவைகள் கழகம் சார்பாக, ஆண்டுக்கு 4.41 லட்சம் குழந்தைகளுக்கு, தலா 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.
இதற்காக 22 காரட் தங்கம், அரசால் வழங்கப்படும். அதை பயன்படுத்தி, மோதிரங்கள் செய்து வழங்க, பல்வேறு நிபந்தனைகள் விதித்து, கடந்த ஜூலை 17ம் தேதி, 'டெண்டர்' வெளியிடப்பட்டது. நேற்று திறக்கப்பட்ட டெண்டரில், 11 முன்னணி தங்க விற்பனை நிறுவனங்கள் பங்கேற்றன.
அதில், 'செய்கூலி, 'ஹால்மார்க், பேக்கிங்' மற்றும் காப்பீடு என, எல்லாவற்றையும் சேர்த்து, வெறும் ஒரு பைசா மட்டுமே மோதிரம் செய்வதற்கான செலவு' என, 'ஜாய் ஆலுக்காஸ்' நிறுவனம் கூறியிருந்தது.
இதுபோல ஜி.ஆர்.டி., ஜுவல்லர்ஸ் 410.97 ரூபாய்; உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் 822.97; டைட்டன் கம்பெனி 832.24; மலபார் கோல்டு அண்ட் டைமண்ட், 871.38; எமரால்டு ஜுவல் இண்டஸ்ட்ரி 947.60; கே.டி.எம்., ஜுவல்லரி 964.08; மோகன்லால் ஜுவல்லர்ஸ் 977.47.
கல்யாண் ஜுவல்லர்ஸ் 978.50; ஜவரி அண்டு கம்பெனி 1,325.61; சரவணா ஸ்டோர்ஸ் ஜுவல்லரி 15,356.27 ரூபாய் என கோரி இருந்தன.
ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தின், குறைந்த விலைப்புள்ளியில், மோதிரம் செய்ய முடியுமா என, டெண்டரில் பங்கேற்ற, 10 நிறுவனங்களிடம் கேட்டதில், கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனம் மட்டும் சம்மதம் தெரிவித்தது.
இதையடுத்து, கடந்த ஜூனில் இருந்து, நான்கு மாதங்களுக்கு தேவையான, ஒரு லட்சத்து 28,499 தங்க மோதிரங்கள் செய்யும் பணியில், 70 சதவீதம் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கும், 30 சதவீதம் கல்யாண் ஜுவல்லஸ் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் செப்., 15ல் தொடங்க உள்ளது. திட்டத்தின் கீழ், கடந்த ஜூன் 22க்கு பின், அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் பயன்பெறுவர் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.