📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 24, 2026 02:02 PM

The Paradise Review: தி பாரடைஸ் விமர்சனம்.. நானி, கயாடு லோஹர் படம் எப்படி?.. தேறுமா? தேறாதா?

The Paradise Review: தி பாரடைஸ் விமர்சனம்.. நானி, கயாடு லோஹர் படம் எப்படி?.. தேறுமா? தேறாதா?

சென்னை: ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி, கயாடு லோஹர், மோகன் பாபு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள படம் தான் தி பாரடைஸ். இந்த படத்துக்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள நிலையில், ஏற்கனவே ஆயா ஷேர் மற்றும் கீர்த்தி சுரேஷ் போட்ட குத்தாட்ட பாடல் ஹிட் அடித்தன.

தசரா படத்தின் இயக்குநர் என்பதால் மீண்டும் அவர் நானியை வைத்து தரமான சம்பவத்தை செய்திருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். நானியும் வித்தியாசமாக ஜடை ஹேர் ஸ்டைல் எல்லாம் போட்டுக் கொண்டு ஜடல் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், படத்துக்கு பெரிதும் எதிர்பார்ப்பு எகிறியது.

ஆனால், டாக்ஸிக் படத்தின் தோல்வி தி பாரடைஸ் படத்துக்கு எதிரான நெகட்டிவிட்டியை பரப்பிய நிலையில், அதையும் தாண்டி இந்த படம் வெற்றிப் பெறும் என படக்குழு நம்பியது. அவர்களின் நம்பிக்கைக்கு படம் தேறியதா? இல்லை தேறவில்லை என்பது குறித்து இந்த விமர்சனத்தில் பார்ப்போம் வாங்க..

தி பாரடைஸ் கதை: பிரிட்டிஷ் மற்றும் நிஜாம் ஆட்சிக்குப் பிறகு ஹைதராபாத்தில் உள்ள 'பாரடைஸ்' பகுதியை, செல்வாக்குமிக்க குடும்பத்தைச் சேர்ந்த சிகஞ்சி மாலிக் (மோகன் பாபு) மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அங்கிருக்கும் மக்களைத் தங்கள் சொல்படி ஆட்டிப்படைக்கின்றனர். அதே பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய 'சவாரி' பழங்குடியின மக்கள் தங்களின் அடையாளம் மற்றும் குடியுரிமைக்காக சம்மக்கா (சோனாலி குல்கர்னி) தலைமையில் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டக் களத்தின் நடுவே சம்மக்காவுக்கு மகனாக ஜடல் (நானி) பிறக்கிறார். தாயின் அரவணைப்பில் வளர்ந்தாலும், ஒரு குறிப்பிட்ட காரணத்தினால் தனது தாய் சம்மக்கா மீது ஜடல் வெறுப்பை வளர்த்துக் கொள்கிறான். சிறு வயதிலேயே மாலிக் குடும்பத்தை எதிர்த்து ஜடல் சிறைக்கும் செல்ல நேரிடுகிறது.

பாரடைஸ் பகுதியில் சிகஞ்சி மாலிக் குடும்பத்தின் அராஜகங்கள் எவ்வாறு தொடர்ந்தன? அப்பகுதி மக்கள் மீது மாலிக் தரப்பினர் நடத்திய அடக்குமுறைகள் என்னென்ன? சம்மக்காவின் போராட்டத்தை மாலிக் தரப்பு எவ்வாறு ஒடுக்க முயன்றது? ஜடல் எந்த மாதிரியான சூழ்நிலையில் பிறந்தான்? அவனுக்கு 'ஜடல் ஜமானா' என்று ஏன் பெயரிடப்பட்டது? தன் தாய் மீது ஜடல் வெறுப்பு கொள்ளக் காரணம் என்ன? மாலிக்கின் வீழ்ச்சியைக் காண ஜடல் ஏன் துடித்தான்? சுப்பலட்சுமி என்கிற சுப்புவுடன் (கயாடு லோஹர்) அவனுக்கு ஏற்பட்ட காதல் என்ன ஆனது? தாயுடன் ஜடல் இணைந்தானா? மாலிக்கை வீழ்த்த ஜடல் தீட்டிய திட்டம் என்ன? பாரடைஸ் பகுதியில் சவாரி மக்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்ததா? போன்ற கேள்விகளுக்கான பதில்களே பாரடைஸ் படத்தின் கதையாகும்.

படம் எப்படி இருக்கு?: ரத்தம் சொட்ட சொட்ட நானி போடும் சண்டைக்காட்சிள் முதல் அந்த காக்கா ஸ்டைலில் அவர் செய்யும் ரியாக்‌ஷன் எல்லாமே அவர் இந்த படத்துக்காக எந்தளவுக்கு மெனக்கெட்டு உள்ளார் என்று தெரிகிறது. ஆயா ஷேர் பாட்டு எல்லாம் ஆட்டம் போட வைக்கிறது. கயாடு லோஹர் சற்றும் எதிர்பார்க்காத அளவுக்கு ஆபாச பட நடிகையாக வந்து ரசிகர்களை சுண்டி இழுக்கிறார். அவரது போர்ஷன் ஆரம்பத்தில் சிறப்பாக இருந்தாலும், சில இடங்களில் சறுக்கி விடுகிறது. முதல் பாதியில் இயக்குநர் முடிந்த வரை கதையின் உலகத்தை அழகாகவும் ஆழமாகவும் செட் செய்ய மெனக்கெட்டுள்ளது தெரிகிறது.

இரண்டாம் பாதியில் வரும் கர்ப்பிணிப் பெண் தொடர்பான காட்சி மிகுந்த உணர்ச்சிப்பூர்வமாகப் படமாக்கப்பட்டு, கதைக்கு மீண்டும் ஒரு பலத்தை சேர்க்கிறது. ஆனால், அதற்குப் பிறகு மீண்டும் அதே சண்டைக்காட்சிகள், வன்முறை மற்றும் ரத்தக் களறி தொடர்வதால், கதையை முழுமையான எமோஷனல் பாதையில் கொண்டு செல்லும் வாய்ப்பை இயக்குநர் தவறவிட்டுள்ளார். ஒட்டுமொத்தமாகச் சொல்வதானால், பிரம்மாண்டமாகச் சொல்லப்பட்டிருக்க வேண்டிய ஒரு கதையை மிகச் சாதாரணமாக முடித்துவிட்ட உணர்வைத் தருகிறார் இயக்குநர்.

பிளஸ்: எப்போதும் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நானி, இதிலும் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தியுள்ளார். இயக்குநர் ஸ்ரீகாந்த் எதிர்பார்த்த பாத்திரப் படைப்பை நானி தனது நடிப்பால் சிறப்பாகக் கொண்டு வந்துள்ளார் என்பது பல காட்சிகளைப் பார்க்கும்போது தெளிவாகத் தெரிகிறது. தனது வழக்கமான நடிப்புப் பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் பொருந்தி நின்று, மொத்த கதையையும் தன் தோளில் சுமந்து சென்றுள்ளார்.

நானியின் தாய் கதாபாத்திரத்தில் சோனாலி குல்கர்னி வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். வில்லனாக மோகன்பாபு மிரட்டியுள்ளார். அனிருத் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலம் படத்துக்கு மிகப்பெரிய பலமாக உள்ளார்.

மைனஸ்: ஆனால், படத்தின் வசனங்களை பின்னணி இசை பெரிதும் ஆக்கிரமித்துள்ளது. பல இடங்களில் வசனங்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. படத்தொகுப்பு ஓரளவுக்கு மட்டுமே திருப்தி அளிக்கிறது. இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா 2ம் பாதி கதையை இன்னமும் ஸ்க்ரிப்ட் பேப்பரில் இருக்கும் போதே எடிட் செய்திருக்கலாம் என்கிற எண்ணம் தான் தோன்றுகிறது. டாக்ஸிக் படத்தை போல இந்த ஏ சான்றிதழ் படமும் ஆக்‌ஷன் நிறைந்து பிரம்மாண்ட மேக்கிங்கில் உருவாகி இருந்தாலும், முக்கியமாக கனெக்ட் ஆகவேண்டிய எமோஷனல் காட்சிகள் பெரிதாக கனெக்ட் ஆகாத நிலையில், மிகப்பெரிய வெற்றியை மிஸ் செய்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.