📅 Friday, 28 August 2026 IST | ஆவணி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 28, 2026 04:04 PM

திமுக மாவட்ட செயலர் எண்ணிக்கை 77ல் இருந்து 110ஆக உயர்வு; ஸ்டாலின் அறிவிப்பு

திமுக மாவட்ட செயலர் எண்ணிக்கை 77ல் இருந்து 110ஆக உயர்வு; ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: நிர்வாக வசதிக்காக திமுக மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 110ஆக உயர்த்தி அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை; திமுக என்ற பேரியக்கம், கொள்கை, அமைப்புமுறை, செயல்பாடுகள், உடன்பிறப்புகள் என்ற நான்கு அடிப்படைகளைக் கொண்டு இயங்கும் இயக்கம். கடந்த 22ம் தேதி நடைபெற்ற கட்சி தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிர்வாகச் சீரமைப்புக்குத் தேவையான மிகமுக்கியமான முடிவுகளைத் தீர்மானங்களாக நிறைவேற்றி இருக்கிறோம்.

கட்சித் தொடங்கப்பட்ட நாள் முதல், இதுவரையில் 15 முறை கட்சி அமைப்பு ரீதியாகத் தேர்தல் நடத்தி, நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்துள்ளோம். இதன் தொடர்ச்சியாக 16வது கட்சி அமைப்புத் தேர்தலை நடத்திடவும், பல்வேறு அமைப்புரீதியாக நிர்வாக மாற்றங்கள் மேற்கொள்ளப்படவும் பல தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் மிக முக்கியமானது மாவட்டக் கழகங்கள் குறித்த தீர்மானமாகும்.

அதில், தற்போதுள்ள மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கையை 77லிருந்து 110-ஆக அதிகரித்து, எந்தெந்தத் தொகுதிகள் எந்தெந்த மாவட்டங்களில் இடம்பெற வேண்டும் என்பதை வரையறுப்பதற்கான அதிகாரம் கட்சித் தலைவரான எனக்கு வழங்கப்பட்டது.

இதனையடுத்து, கட்சி மறுசீரமைப்புக் குழு வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில், கட்சி முன்னணியினருடன் கலந்தாலோசித்து, தமிழல் உள்ள தொகுதிகளை 110 மாவட்டங்களாகப் பகுத்து அறிவிக்கிறேன். அதில், அதிகமான மக்கள் தொகை இருப்பதன் காரணமாகச் சோழிங்கநல்லூர் தொகுதி மட்டும் தனி மாவட்டமாக அறிவிக்கப்படுகிறது.

அறிவிக்கப்பட்டுள்ள இந்த 110 மாவட்டக் கழகங்களில் தற்போதுள்ள மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழகத்தால் அனுப்பப்படும் பிரதிநிதியின் முன்னிலையில் மாவட்டச் செயற்குழுவைக் கூட்டி, கிளை அமைப்புகளைப் பிரிப்பதற்கான பரிந்துரைகளை 15 நாட்களுக்குள் வழங்கிட வேண்டும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.