📅 Saturday, 29 August 2026 IST | ஆவணி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 29, 2026 05:03 PM

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை

சென்னை: அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்வு தொடர்பாக சட்டசபையில் நேற்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதில் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்கட்சியினர் பேசினர். அதற்கு விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வெங்கடரமணன் விளக்கம் அளித்தார்.

தமிழக சட்டப்பேரவை நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் விலைவாசி உயர்வு குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் கீழ் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசியதாவது: அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி தற்போது நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே இருக்கின்றது. அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை என்ற எந்தப் பொருளை எடுத்தாலும், கடந்த மூன்று மாதங்களில் அவற்றின் விலை பல மடங்கு உயர்ந்திருக்கின்றது. இந்த அரசு அமைந்ததிலிருந்து அத்தியாவசியப் பொருட்களுடைய விலை கடுமையாக உயர்ந்திருக்கின்றது.

மே மாதம் ஒரு கிலோ அரிசி 55 ரூபாய்க்கு விற்பனையானது, இன்றைக்கு 75 ரூபாய். மே மாதம் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 40 ரூபாய், இன்றைக்கு கிலோ 80 ரூபாய். மே மாதம் ஒரு கிலோ துவரம் பருப்பு 150 ரூபாய், இன்றைக்கு கிலோ 180 ரூபாய். மே மாதம் ஒரு கிலோ சர்க்கரை ரூபாய் 40, இன்றைக்கு ஒரு கிலோ சுமார் 70 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது. இந்த விலை ஏற்றத்தால், மக்கள் மிகவும் பாதிப்படைந்திருக்கிறார்கள். ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருக்கக்கூடிய கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள் இதைக் கண்டித்து போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

இந்த விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த, அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். உதாரணத்திற்கு 2007ம் ஆண்டு தேசிய அளவில் கடுமையான விலைவாசி உயர்வு ஏற்பட்டது. அப்பொழுது முதல்வராக இருந்த கலைஞர், தமிழ்நாட்டு மக்களைப் பாதிக்கக் கூடாது என்பதற்காக சிறப்பு பொது விநியோகத் திட்டத்தை அறிவித்தார். அந்த திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக பருப்பு, எண்ணெய், ரவா, மைதா உள்ளிட்ட பொருட்களை, சந்தை விலையை விட குறைவான விலைக்கு மக்களுக்கு வழங்கினார்.

அதுமட்டுமல்லாமல் கடுகு, சீரகம், வெந்தயம் உள்ளிட்ட 10 மளிகைப் பொருட்களை 50 ரூபாய்க்கு வழங்கினார்.

கலைஞர் 2007ல் தொடங்கி வைத்த, அந்த சிறப்புப் பொது விநியோகத் திட்டம் தற்போது வரை நடைபெற்று வருகிறது. ரேஷன் கடைகள் மூலமாக சர்க்கரை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை தற்போது வழங்கப்படுகின்ற அளவை விட, இன்னும் கூடுதல் அளவு வழங்கிட இந்த அரசு ஆவன செய்ய வேண்டும் என்று உங்கள் மூலமாக கேட்டுக்கொள்கின்றேன். முக்கியமாக, முதல்வர் தலைமையில் நிதி, உணவு, கூட்டுறவு உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள், அதிகாரிகள்

பங்கேற்கின்ற வகையில் ஒரு சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தி, விலைவாசி உயர்வுப் பிரச்னைக்கு இந்த அரசு, உடனடியாக ஒரு நல்ல தீர்வு காண வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி: அரிசி விலை தற்போது கிலோவுக்கு 20 ரூபாய் உயர்ந்திருக்கின்றது. ஒரு கிலோவுக்கு கிட்டத்தட்ட 48 ரூபாய்க்கு விற்பனை செய்திருந்த சர்க்கரை இன்றைக்கு 72 ரூபாய்க்கு விற்கிறது. மஞ்சள் 1 கிலோ 200க்கு விற்பனை செய்து கொண்டிருந்தது, இப்ப ரூ.250க்கு விற்கிறது. மிளகாய் ஒரு கிலோ ரூ.200க்கு விற்பனையாகி வந்தது தேர்தலுக்கு முன்பு. இந்த ஆட்சி வந்த பிறகு தற்போது விலை ரூ.300க்கு விற்கிறது.

வெல்லம் 1 கிலோ ரூ.55க்கு விற்றது, இப்ப ரூ.75க்கு விற்கிறது. அதேபோல புளி 1 கிலோ ரூ.150க்கு விற்றது, இப்ப ரூ.250க்கு விற்பனை செய்கிறது. பருப்பு வகையிலும் கிட்டத்தட்ட விலை அதிகம். எண்ணெய் விலை 40% உயர்ந்திருக்குது. இதனால ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கிறார்கள். இப்ப வறட்சி நிலவிக் கொண்டிருக்கின்றது. ஆந்திராவில இருந்து நமக்கு அரிசி கிடைக்கும், அங்கேயும் வறட்சி இருக்கின்ற காலக்கட்டத்தில் அங்கே வருகின்ற அரிசியுடைய வரவும் குறைஞ்சு போச்சு.

ஏற்கனவே அதிமுக அரசு இருக்கின்ற பொழுது, இந்த விலையேற்றம் ஏற்படுகின்ற பொழுது எந்த உணவுப் பொருள் விலையேறுகின்றதோ அந்த உணவுப் பொருள் எந்த மாநிலத்தில் விலை குறைவாக இருக்கிறதோ அங்கே போய் கொள்முதல் செய்து, கூட்டுறவுச் சங்கத்தின் மூலமாக தமிழகத்திற்கு கொண்டு வந்து அதை விற்பனை செய்து, அந்த விலையேற்றம் தடுக்கப்பட்டது.

அதற்காக விலைக் கட்டுப்பாட்டு நிதியம் என்ற ஒரு நிதியை ஒதுக்கி, அதுக்கு 100 கோடி ரூபாய் கூட்டுறவுச் சங்கத்துக்குக் கொடுக்கப்பட்டு அதை பயன்படுத்தி வந்த காரணத்தினாலே, விலை இப்படி அத்தியாவசிய உணவுப் பொருள் விலை ஏறுகின்ற பொழுது அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தோம். அதைப் போல இந்த அரசும் இந்த உணவுப் பொருள் விலையைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதாவது நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சி செய்கிறதா?

கணேஷ்குமார் (பாமக): அத்தியாவசிய பொருட்கள் விலை 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. கடந்த காலங்களில் பொங்கலுக்கு எல்லாம் தொகுப்பு வழங்குவது போல, இந்த விலைவாசி உயர்வு சரியாகும் வரை, பிற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து, ஏழை, எளிய மக்களுக்கு தொகுப்புகளாக வழங்க வேண்டும். பருப்பு பதுக்கிறார்கள். அரசோடு கனிவோடு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாரகை கத்பட் (காங்கிரஸ்): தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டாலும், அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இருப்பினும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு வருத்தமளிக்கிறது. பொங்கல் தொகுப்பு வழங்குவது போல், மாதம் மாதம் ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் தொகுப்பு வழங்குவதற்கு அரசு முன்வர வேண்டும்.

டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்): சாமானிய மக்கள் பயன்படுத்துகிற அத்தியாவசிய பொருட்கள், காய்கறி விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் தமிழக அரசு பொதுவிநியோக முறையின் கீழ் வழங்க வேண்டும். ஏனென்றால் அடுத்தடுத்து விநாயகர் சதுர்த்தி, தீபாவளி போன்ற பண்டிகைகள் வருகிறது. பொதுமக்களுக்கு எளிதாக குறைந்த விலையில் பொதுவிநியோகம் சார்பில் வழங்க வேண்டும்.

செல்லசாமி (மார்க்சிஸ்ட்): அத்தியாவசிய பொருட்கள் விலை வெளிமார்க்கெட்டில் பல மடங்கு உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு நேரத்தில் பொருட்களை பதுக்கி வைப்பது இயல்பு. தமிழகத்தில் அப்படி பதுக்கி வைத்திருக்கின்ற பொருட்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது மட்டுமல்ல, தடுக்க வேண்டும். பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடை மூலமாக வழங்கினால் தான் சாதாரண மக்கள் வாழ முடியும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

இதற்கு பதில் அளித்து உணவு வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் பேசியதாவது: ஈரானியப் போர் சூழலினாலும், பெட்ரோல்-டீசல் வரத்து குறைவாக இருப்பதாலும் இந்த விலையேற்றம் எல்லா இடங்களிலும் இருக்கிறது. குறிப்பாக சர்க்கரை அதிக உற்பத்தி செய்யும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களோடு ஒப்பிடும்போது கூட இங்கே ரூ.2 ரூபாய் குறைவாகத்தான் உள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் அனைத்து இடங்களிலும் உயர்ந்துள்ளது.

முதல்வர் தலைமையில் உள்ள குழுவில், இந்த அரசில் வாரம் வாரம் மற்றும் தினந்தோறும் சுமார் 41 பொருட்களுக்கு உண்டான விலை மாற்றங்களை கண்காணித்து வருகிறோம். இன்றைக்கு தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் இருக்கிற விலையைச் சேகரித்து, சராசரி கணக்கிட்டு அரிசி, சர்க்கரை, வெங்காயம், உருளைக்கிழங்கு வரை அனைத்து உணவுப் பொருட்களையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

எங்கெல்லாம் விலை அதிகமாக இருக்கிறதோ, அந்தப் பொருட்களையெல்லாம் கண்டறிந்து கடந்த ஆட்சியின் நல்ல நடைமுறைகளைப் பின்பற்றி, மக்களுக்கு எளிதாகச் சென்றடையவும் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கவும் தீவிரமாகச் செயல்படுகிறோம். நேற்று கூட வெங்காய விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு குறித்து கூட்டத்தில் விவாதித்தோம். பண்டிகைக் காலங்களிலோ அல்லது டீசல் விலையேற்றத்தினாலோ அல்லது விளைச்சல் குறைபாட்டினாலோ விலை உயர்கிறதா என்பதை ஆராய்ந்து வருகிறோம்.

இன்னும் 2-3 நாட்களில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். ரேஷன் கடைகள் மட்டுமல்லாமல், பசுமைப் பண்ணை நுகர்வோர் கடைகள் மூலமாகவும் மலிவு விலையில் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்காகச் செயலாற்றும் இந்த அரசு, எந்தவிதமான விலை உயர்வோ அல்லது பொருட்கள் தட்டுப்பாடோ ஏற்படாதவாறு மிக விரைவில் உரிய நடவடிக்கைகளை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

* அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை என்ற எந்த பொருளை எடுத்தாலும், கடந்த மூன்று மாதங்களில் அவற்றின் விலை பல மடங்கு உயர்ந்திருக்கின்றது.

* தவெக அரசு அமைந்ததிலிருந்து அத்தியாவசியப் பொருட்களுடைய விலை கடுமையாக உயர்ந்திருக்கின்றது.

* மே மாதம் ஒரு கிலோ அரிசி 55 ரூபாய்க்கு விற்பனையானது, இன்றைக்கு 75 ரூபாய். ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 40 ரூபாய், இன்றைக்கு கிலோ 80 ரூபாய்.

* மே மாதம் ஒரு கிலோ துவரம் பருப்பு 150 ரூபாய், இன்றைக்கு கிலோ 180 ரூபாய். ஒரு கிலோ சர்க்கரை ரூபாய் 40, இன்றைக்கு ஒரு கிலோ சுமார் 70 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது.